×

ஆத்தூரில் நாவல் பழம் வரத்து அதிகரிப்பு

கிலோ ₹200க்கு விற்பனைஆத்தூர், மே 28: ஆத்தூரில் நாவல் பழம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், கிலோ ₹200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மரங்களிலிருந்து கிடைக்க கூடிய பழ வகைளில் நாவலுக்கு முக்கிய இடம் உண்டு. மிக பிரமாண்டமாக வளரக்கூடிய நாவல் மரங்களில் கிடைக்க கூடிய கனிகள் அலாதி சுவை கொண்டதாகும். காயாக இருக்கும்போது துவர்ப்பு சுவை கொண்டதாக இருக்கும். மரத்தில் ஏறி பறிக்க முடியாத அளவிற்கு நுனி கிளைகளில் தொங்கிக்கொண்டிருக்கும் பழங்களை கீழே விழுந்தாலே பொறுக்கி சேகரிக்க முடியும். புராணத்தில் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என அவ்வை மூதாட்டிக்கு முருக பெருமான் பாடம் எடுக்க உதவிய நாவல் பழம் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் அறுவடைக்கு வருகிறது. முன்பெல்லாம் நாட்டு பழங்கள் தான் சந்தைக்கு வரும். தற்போது, நன்கு திரட்சியான கலப்பின பழங்கள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதனையும் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச்செல்வதால் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. சர்க்கரை நோய்க்கு அருமருத்தாக கருதப்படும் நாவல் பழம் ஆத்தூர் பகுதிக்கு தினசரி 1 டன் வரைக்கும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சேலம், பெங்களூரு பகுதியிலிருந்து வாகனங்களில் கொண்டு வரப்படும் பழங்களை பல்வேறு இடங்களில் குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக நாவல் பழ விற்பனை அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் உள்ளூர் பழத்தின் வரத்து அதிகமாக இருந்தது. தற்போது, உள்ளூர் வரத்து இல்லாததால் பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பகுதியிலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த பழம் மற்றும் கொட்டைகளை சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுத்துவதால் விற்பனை சூடுபிடித்துள்ளது. கால்கிலோ ₹50க்கும், கிலோ ₹200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. விலையை பொருட்படுத்தாமல் அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர். வரத்து அதிகரித்துள்ள நிலையில் நாவல் பழத்தினை பதப்படுத்திட உழவர் சந்தையில் உரிய ஏற்பாடு செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Atthur ,
× RELATED சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர காவல் நிலைய...