×

எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோயிலில் தீ மிதித்த பக்தர்கள்

பரமத்திவேலூர், மே 28:  மோகனூர் அருகே எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த  14ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 20ம் தேதி மறுகாப்பு கட்டி, தினசரி சாமி திருவீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு வடிசோறு பூஜையும், திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாவிளக்கு பூஜையும் நடந்தது. பின்னர், கோயில் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணியளவில், சாமியை எடுத்துக்கொண்டு பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றில் புனித நீராடி கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி, ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், சாமி ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிச்சட்டி எடுத்தும் வந்தனர். இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொங்கல் வைத்தல், கிடா வெட்டு நடைபெற்று, மாலை 4 மணிக்கு திருத்தேர் திருவீதி உலா நடைபெறுகிறது. இரவு குதிரை வாகனத்தில் சுவாமி திரு வீதி உலா நடைபெறும். நாளை மாலை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags : devotees ,S.Valavanthi Mariamman ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...