×

திருவேங்கடத்தில் தொடர் கைவரிசை அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க சுரண்டை பஜார், பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?

சுரண்டை, மே 28:  சுரண்டை பகுதியில் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்க பஜார் மற்றும் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுரண்டை மகாத்மா காந்தி பஸ் நிலையம், 2018 ஏப்ரலில் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. கடந்த பிப்ரவரியில் இந்த பஸ் நிலையம் திறக்கப்பட்டது. இங்கிருந்து சென்னை, கோவை, திருப்பூர், மதுரை பகுதிகளுக்கு செல்லும் தொலைதூர பேருந்துகளும், நெல்லை, தென்காசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு என தினமும் 80க்கும் மேற்பட்ட வந்து செல்கின்றன. சுரண்டை காமராஜர் கல்லூரியில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவிகள் மற்றும் சுரண்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும்  பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். கடந்த மாதத்தில் சுரண்டை பஸ் நிலையம் அருகே கிரேஸ் பால்தாய் (75) என்ற மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகையை அதிகரித்து வாங்கி தருவதாக கூறி மர்மநபர் 5 பவுன் நகையை திருடிச் சென்றார். மருக்கலாங்குளத்தை சேர்ந்த விவசாயி தங்கபாண்டியன் (68) என்பவரிடம் திருமண ஆசைகாட்டி 5 பவுன் நகையை பெண் அபேஸ் செய்தார். மேலும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட அழகு ரமா (39) என்ற பெண் போலீசில் சிக்கினார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுபோன்ற தொடர் கைவரிசை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் சுரண்டை நகருக்கு வரும் மக்கள் கடும் அச்சமடைந்து உள்ளனர். எனவே பொதுமக்கள்  நலன் கருதி சுரண்டை பஜார் மற்றும் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : bus stop ,bus station ,
× RELATED கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில்...