×

நல்லாயிருந்த மின்மோட்டாரை கழற்றிச் சென்ற ஊராட்சி செயலரை சிறைபிடித்த மக்கள்

கடையம், மே 28:  கடையம் அருகே மேட்டூரில் ஆழ்துளை குழாய் கிணறு மோட்டாரை மாற்றியதாக கூறி ஊராட்சி செயலரை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடையம் அருகே  கடையம் பெரும்பத்து ஊராட்சிக்குட்பட்டது மேட்டூர். இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஊராட்சி சார்பில் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு 3 சின்டெக்ஸ் தொட்டி மூலமும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர், ஆழ்துளை கிணறுடன் குழாய் மூலம் இணைக்கப்பட்ட சின்டெக்ஸ் தொட்டியை இடித்துவிட்டனர். மற்றொன்றில் தண்ணீர் நல்ல முறையில் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அங்கிருந்த மின்மோட்டாரை கழற்றி விட்டு பழைய மோட்டாரை பொருத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்ைக மேற்கொண்டது.
இதையறிந்த அப்பகுதி பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர், திரண்டு சென்று மோட்டாரை மாற்ற முயன்ற ஊராட்சி செயலர் ஆனைமணி என்பவரை சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த கடையம் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரபிள்ளை தலைமையிலான போலீசார்,  பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது புதிய மோட்டாரை பொருத்துவதாக ஊராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்தனர். இதையேற்று ஊராட்சி செயலரை பொதுமக்கள் விடுவித்தனர்.

‘‘பஞ். செயலரை மாற்ற வேண்டும்''
சிறைபிடிப்பு போராட்டம் குறித்து மேட்டூர் கிராம மக்கள் கூறுகையில், கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து செயலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. பழைய மின்மோட்டார்கள் அனைத்தும் என்னவானது என தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்க வேண்டும். வீட்டு ரசீதுக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கேட்கின்றனர். இந்த பணத்தை கொடுக்க தாமதமானதால் ஆபாசமாக பேசுகிறார். எனவே பஞ். செயலரை மாற்ற வேண்டும், என்றனர்.

Tags : panchayat secretary ,
× RELATED அரக்கோணத்தில் ரூ.1.79 கோடியில் வளர்ச்சி ...