×

உடன்குடி, மெஞ்ஞானபுரம் பகுதியை இரவு நேரங்களில் புறக்கணிக்கும் அரசு பஸ்கள்

உடன்குடி, மே 28: உடன்குடி, மெஞ்ஞானபுரம் பகுதியை இரவு நேரங்களில் புறக்கணிக்கும் அரசு பேருந்துகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  உடன்குடி பகுதிக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. 35க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகளும் சென்னை, கோவை, பெங்களூரு பகுதிக்கும் இயக்கப்படுகிறது. வைகுண்டம் பணிமனை மூலம் திருநெல்வேலியில் இருந்து 137ஜு என்ற பேருந்து ஆழ்வார்திருநகரி, நாசரேத், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி வழியாக உடன்குடிக்கு இயக்கப்படும். பகலில் சரியான நேரத்திற்கும், அதற்கென ஒதுக்கப்பட்ட வழித்தடங்களிலும் சரியாக இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், இரவு நேரங்களில் முறையாக இயக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.குறிப்பிட்ட நிறுத்தங்களில் நிறுத்தாமல் பயணிகளை நடத்துநர்கள் தரக்குறைவாக பேசி இறக்கி விடும் சூழல் தான் உள்ளது. மேலும் போக்குவரத்து வசதியே இல்லாத எள்ளுவிளை, கரிசன்விளை, வீரப்பநாடார்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கும் செல்லாமல் தவிர்த்து விடுகின்றனர். இதன் காரணமாக இந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போன்று திருச்செந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்படும் 6ஏ டவுன் பஸ் குலசேகரன்பட்டினம் வழியாகவும், காயாமொழி, சீர்காட்சி வழியாகவும் உடன்குடி, தட்டார்மடம், படுக்கபத்து வரை சுழற்சி முறையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடங்களிலும் சரியான நேரத்திற்கு பஸ் வருவது இல்லை. மேலும் இரவு நேரங்களிலும் முறையான வழித்தடங்களில் இயக்காமல் தவிர்த்துவருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து சரியான வழித்தடங்களில் முறையாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Madanganapuram ,Udangudi ,
× RELATED உடன்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது