பிஎஸ்என்எல் செல்போன் டவருக்கு மின் கட்டணம் செலுத்தாததால் சேவை துண்டிப்பு

திங்கள்சந்தை, மே 28 : மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் சிக்னல் டவர் அமைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு செல்போன் சேவை வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இந்நிறுவனம் வாயிலாக சுமார் 200க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்கள் தனியார் மற்றும் அரசு இடங்களில் அமைக்கப்பட்டு பி.எஸ்.என்.எல். சேவை வழங்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
 சமீபகாலமாக இச்செல்போன் டவருக்கான மின்கட்டணம், தொலைதொடர்பு துறை சார்பில் மின் வாரியத்திற்கு சீராக செலுத்தப்படுவதில்லை. இதனால் மின்வாரிய துறை அவ்வப்போது செல்போன் டவருக்கான மின்விநியோகத்தை துண்டித்து விடுகிறது. பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக மீண்டும் மின்கட்டணத்திற்கான பணத்தினை பிஎஸ்என்எல் நிர்வாகம் கட்டவே, மீண்டும் மின்விநியோகம் வழங்கப்பட்டு செல்போன் சேவை சீர்செய்யப்பட்டு வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

இதனால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மாற்று செல்போன் (ஜியோ) நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர். கடந்த ஒருவார காலமாக இரணியல், லெட்சுமிபுரம், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள பிஎஸ்என்எல் செல்போன் டவருக்கான மாதாந்திர மின் கட்டணத்தை நிர்வாகம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இது குறித்து தொலைதொடர்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, உயர் அதிகாரிகள் மேற்படி டவருக்கான மின் கட்டணம் தரவில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும் என கைவிரித்து வருகின்றனர். இது குறித்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறுகையில்: மத்திய அரசு தொலைதொடர்பு துறையை தனியாருக்கு தாரை வார்க்கவே இந்நடவடிக்கையை மறைமுகமாக செயல்படுத்தி வருகிறது. இத்துறையின் வாயிலாக பலகோடி ரூபாய் வருமானம் வரும். பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் மெத்தன போக்கு கண்டிக்கத்தக்கது. இரணியல், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட குளச்சல் தொகுதியில் அனைத்து பகுதியிலும் சீராக பிஎஸ்என்எல் செல்போன் சேவை தங்குதடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.


Tags : BSNL ,
× RELATED பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு நடப்பு...