கரைகள் சேதமடைந்த தோவாளை சானல் கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை

ஆரல்வாய்மொழி, மே 28:  பாசனத்திற்காக அணையில் இருந்து தோவாளை சானல் வழியாக வரும் தண்ணீர் மூலம் ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அதிகமான குளங்கள் நிரப்பப்பட்டு அதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. ஆனால் தோவாளை சானலின் கரை பகுதியானது பெரும்பாலான இடங்களில் சேதமடைந்து மண் அரிப்பு ஏற்பட்டு உடையும்  நிலையில் உள்ளது. இதனை பராமரிக்க வேண்டிய பொதுப்பணித் துறை இதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். குறிப்பாக செண்பகராமன்புதூர் - தோவாளை சாலை அருகே வடக்கு மலையில் இருந்து வருகின்ற உப்பாத்து ஓடை செல்கின்றது. இந்த ஓடையின் மேல் பாலம் அமைக்கப்பட்டு அதில் தோவாளை சானல் செல்கின்றது. இந்நிலையில் இப்பாலத்தின் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிவு ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் உடையும் சூழ்நிலை உள்ளது. எனவே  விவசாய சங்கத்தினர்  இதனை சரிசெய்ய வேண்டும் என பல முறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. அது போன்று தோவாளை அருகே இச்சானலின் பக்க சுவர்கள் பல இடங்களில் உடைந்து சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் - தோவாளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தோவாளை-செண்பகராமன்புதூர் இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டு தண்ணீர் வெளியேறி விவசாய நிலங்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது பொதுப்பணித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடைப்பினை தடுக்கும் பொருட்டு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர். சில நாட்களுக்கு பின்  இச்சாலை வழியாக வந்த மினி லாரியானது சானலின் பக்க சுவர் உடைந்த காரணத்தால் மண் மூட்டைகள் சரிந்து சானலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்வாறு பல சம்பவங்கள் நடைபெற்றும் பொது பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது பற்றி விவசாய சங்கத்தினர்  கூறும்போது, தோவாளை சானலில் தண்ணீர் வரும் போது பக்க சுவர் இடிந்த பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு உடையும் சூழ்நிலை ஏற்பட்ட போது தற்காப்புக்காக மணல் மூட்டைகளை வைத்து உடைப்பினை அதிகாரிகள் தடுத்தனர். அப்போது  தண்ணீர் நிறுத்தப்பட்ட உடன் சானலில் உடைந்த பகுதிகள் சரி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தோவாளை சானலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த வித பணியும் தொடங்கவில்லை. எனவே உடனே சானலில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். இவ்வாறு விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர்.

Tags : Banners ,
× RELATED உயர்நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத...