×

கோட்டாரில் கடும் நெருக்கடியால் பயணிகள் அவதி நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு புறவழிச்சாலை வளர்ச்சி பணி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

நாகர்கோவில், மே 28:  நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஒழுகினசேரியில் இருந்து புற வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வளர்ச்சி பணி ஆலோசனை குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய வளர்ச்சி பணிகள் தொடர்பாக  ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய கூட்ட அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் கோட்ட வணிக மேலாளர் பாலமுரளி தலைமை வகித்தார். இதில் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் ராம், சங்கர நாராயணன், மேரி ஜெசி ரோச், பொன்னம்பலம், பீர் முகமது, லதா, சங்கரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நாகர்கோவில் ரயில் நிலைய வணிக மேலாளர் சர்தார்,  ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் நரேந்திரகுமார், தலைமை ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.அப்போது கடந்த முறை தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அதிகாரிகள் விளக்கினர். இதில் பேசிய ஆலோசனை குழு உறுப்பினர்கள், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. குறிப்பாக பிளாட்பாரம் 2, 3 ல் கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லை. முதல் பிளாட்பாரத்தில் போதிய இருக்கைகள் கிடையாது. முதல் பிளாட்பாரத்தில் இருந்து 2 மற்றும் 3 வது பிளாட்பாரத்துக்கு செல்ல லிப்ட் அமைக்கும் பணிகள் கிடப்பில் கிடக்கின்றன. ரயில் நிலையத்துக்கு வருவதற்கு போதிய சாலை வசதி இல்லை. கோட்டாரில் ரயில்வே நிர்வாகம் விலை கொடுத்து வாங்கிய ரோட்டில் சரக்கு லாரிகள் நிற்பதால், அவசரமாக ரயிலை பிடிக்க வரும் பயணிகள் சரியான நேரத்துக்கு வர முடியாமல் ரயிலை தவற விடும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை ரயில்வே மீட்க வேண்டும்.

 நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் கிடக்கிறது. நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் இருந்து (நாகராஜா கோயில் எதிர்புறம்)  ஊட்டுவாழ்மடம் வழியாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சாலை அமைக்க வேண்டும். இதற்கு ரயில்வே நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.ஊட்டுவாழ்மடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும் வேளையில் ஏராளமான வாகனங்கள் இரு பக்கமும் நிற்கின்றன. எனவே இங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். நாகர்கோவில் ரயில் நிலைய பைபாசில் பிளாட்பாரம் அமைக்க வேண்டும். ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறையில் போதுமான வசதிகள் இல்ைல. பெண்களுக்கான காத்திருப்பு அறையில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. எனவே உடனடியாக இந்த குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்றனர். இதற்கு பதிலளித்த கோட்ட வணிக மேலாளர் பாலமுரளி, ஆகஸ்ட் மாதத்துக்குள் லிப்ட் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2 மற்றும் 3 பிளாட்பாரங்களில் கழிவறை பணிகளுக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும் என்றார். ப்ரீபெய்டு ஆட்டோ ெதாடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.  பின்னர் அவர் பாதியில் நிற்கும் லிப்ட் பணிகள், பெண்கள் காத்திருப்பு அறை ஆகியவற்றை பார்வையிட்டார்.

ப்ரீபெய்டு ஆட்டோ சிஸ்டம்
ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூறுகையில், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ சிஸ்டம் கொண்டு வருவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெண்டர் விடப்பட்டு, அதற்காக கவுண்டர் கூட அமைக்கப்பட்டன. ஆனால் அந்த பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் சில ஆட்டோ டிரைவர்கள் பயணிகளிடம் அநியாய கட்டணம் வசூலிக்கிறார்கள். ரயில்வே நிர்வாகம் இதை முறைப்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே ப்ரீபெய்டு ஆட்டோக்கள் கொண்டு வர வேண்டும். நாகர்கோவிலில் வாகன பார்க்கிங் நிலையத்தில் முறையாக ரசீது வழங்கப்படுவதில்லை. வாகனம் நிறுத்துபவர்களுக்கு அவர்கள் செலுத்தும் கட்டணத்துக்கு முறையாக ரசீது வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Tags : Passenger crisis ,railway station ,Kotar ,Nagarcoil ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!