×

தோவாளை தாலுகா அலுவலகத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன

நாகர்கோவில், மே 25: குமரி பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்தது. இந்த தேர்தலுக்காக 1694 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மின்னணு வாக்கு இயந்திரம் கொண்டுவரப்பட்டு, சட்டமன்ற தொகுதி வாரியாக வைக்கப்பட்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.   இந்நிலையில் கடந்த 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் மீண்டும் அந்தந்த அறைகளில் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து மின்னணு வாக்கு இயந்திரங்களை மீண்டும் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. தமிழக தேர்தல் ஆணையரிடம் இருந்து இதற்கான முறையான உத்தரவு வந்தது. பின்னர் தேர்தல் நடத்திய அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான பிரசாந்த் வடநேரே, கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்த மின்னணு இயந்திரங்களை பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நேற்று பணியாளர்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்களை அறையில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு மீண்டும் சீல்வைத்து, இரும்புபெட்டிகளில் வைக்கப்பட்டு பூட்டப்பட்டது. அவை லாரிகளில் ஏற்றி தோவாளை தாலுகா அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.


Tags : office ,Taluk ,
× RELATED ஓசூரில் வீடு வாடகைக்கு பார்ப்பது போல...