×

சிவகாசி நகராட்சி 9வது வார்டில் குப்பை மேடாக காட்சியளிக்கும் தெருக்கள்

சிவகாசி, மே 25: சிவகாசி நகராட்சி 9வது வார்டில் உள்ள தெருக்களில் ஆங்காங்கே குப்பை கழிவுகள் மலை போல் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளது. சிவகாசி நகராட்சி 9வது வார்டில் நேசனல்காலனி, விசாலாட்சி நகர், ஞானகிரி ரோடு தெருக்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள தெருக்களில் சாலைகள் அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலைகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. மழை காலங்களில் சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பள்ளபட்டி சாலையில் இருந்து உசேன் காலனி செல்லும் சாலை வரையிலான வாறுகால் தூர்ந்து கிடக்கிறது. இதனால் இந்த பகுதி வாறுகால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது.

மழை காலங்களில் கழிவு நீருடன், மழை நீரும் சாலையில் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைந்து வருகிறது. உசேன் காலனி விலக்கில் இருந்து செல்லும் கழிவுநீர் மருத நாடார் ஊரணி கால்வாய் வழியாக சென்று பொத்துமரத்து ஊரணியை அடைகிறது. இதில் மருத நாடார் ஊரணி கால்வாயில் கழவு நீருடன் குப்பை கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி வாறுகாலிலேயே தேங்கி சுகாதாரகேட்டை உண்டாக்கி வருகிறது. ஞானகிரி ரோடு தெருவில் உள்ள சாலைகள் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர்.

ஞானகிரி சாலையில் இருந்து தனியார் கல்லூரிக்கு செல்லும் சாலை, பள்ளபட்டி சாலை, உசேன் காலனி சாலையில் குப்பை கழிவுகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பை கழிவுகளை நாய், மாடு கிளரி செல்வதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் சுகாதாரகேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவி வருகிறது. 6 மாதங்களுக்கு ஒரு முறை வாறுகால் அகற்றப்படுவதால் வாறுகாலில் புழுக்கள் மிதக்கிறது. இதனால் டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது.

வாறுகால் முறையாக அகற்றப்படாததால் இரவு நேரங்களில் கொசு தொல்லையால் மக்கள் வீடுகளில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். 9வது வார்டு பகுதியில் தொழில் பிரமுகர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். நகராட்சிக்கு அதிமாக வரி செலுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு நகராட்சி நிர்வாகம் அடிப்படை பணிகள் மேற்கொள்வதில் அலட்சியமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் செயல்படாமல் முடங்கி கிடப்பதால் இப்பகுதியில் சுகாதார கேட்டினால் நோய் பரவும் ஆபத்து நிலவுகிறது.

Tags : Street ,9th Ward ,Sivakasi ,
× RELATED நிலத்தகராறில் விபரீதம் தீக்குளித்து...