×

மக்கள் மகிழ்ச்சி திருச்சி -சிதம்பரம் நெடுஞ்சாலையில் வெட்டிய மரங்களுக்கு பதிலாக மரக்கன்று நட வேண்டும்

ஜெயங்கொண்டம், மே 25:  திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது நான்கு வழி சாலை அமைக்கப்படுவதற்காக சாலைப் பணிகள் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சியிலிருந்து ஜெயங்கொண்டம் வழியாக சிதம்பரம் செல்லும் சாலை சுமார் 145 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இருபுறமும் வளர்ந்து இருந்த புளியமரங்கள் இணைந்து ஒரு குகைக்குள் செல்வதை போல அழகாக காட்சி அளித்துக் கொண்டிருந்தன. ஆனால் தற்போது சாலை பணிகள் துவங்கி நடைபெறும் நேரத்தில் நூற்றி நாற்பத்தி ஐந்து கிலோமீட்டரில் சுமார் 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. வெட்டப்பட்ட மரங்கள் அனைத்தும் திருப்பூர் ஈரோடு தொழிற்சாலைகளுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. தற்போது சிதம்பரத்தில் இருந்து திருச்சி செல்லும் வரை சாலைகளில் இடையில் மரங்கள் இல்லாமல் கடும் வெயிலில் பேருந்து, பைக், கார்களில் செல்வோர் ஒதுங்கி இளைப்பாறுவதற்கு கூட மர நிழல் இல்லை.

சாலைப் பணிகள் துவங்கப்பட்டு முடிவதற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகிவிடும், அதன் பின்னர் மரக்கன்றுகள் வைத்து அது வளர்ந்து நிழல் தருவதற்கு குறைந்தது ஐந்து அல்லது ஆறு வருடங்கள் முடிந்துவிடும். ஆறு வருடங்கள் வரை  நிழலை பார்க்க முடியாது, வெயிலில் மட்டுமே எங்கும் செல்ல முடியும் நிலை உண்டாகிவிடும். ஆதலால் மரங்கள் வெட்டும் இப்போதே சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை இப்போதிருந்தே நட்டு பராமரிக்க வேண்டும். மரக்கன்றுகள் விரைவில் வளரக்கூடியதாகவும் அதிக நிழல்தரக்கூடியதாகவும் உள்ள மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை செய்யவில்லை என்றாலும் மாவட்ட நிர்வாகம் இதற்கு முன்னெடுத்து செய்து கொடுத்து வெயிலில் இருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும். ஒரு மரம் வெட்டி அதற்கு பதிலாக 10 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் அப்போது பத்தில் 5 மரக்கன்றாவது உயிர் பிழைக்க கூடும். இந்த நிலையிலாவது ஓசோன் படலத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இதுவும் ஒரு தருணமாக ஏற்றுக் கொள்ளவும் முன்நின்று செய்ய வேண்டும். நெடுஞ்சாலை துறை மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றிற்கு பொதுமக்களும் தங்களுடைய ஆதரவை தெரிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


Tags : highway ,Trichy-Chidambaram ,
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...