×

நாகை- திருச்சி சாலையில் உரக்குடோன் குப்பை தீப்பற்றி எரிவதால் வாகன ஓட்டிகள் அவதி

நாகை, மே 25: நாகை உரக்குடோனில் எந்த நேரமும் தீப்பிடித்து எரிவதால் அந்த பகுதி புகை மண்டலமாக மாறி வாகன ஓட்டிகளை அவதிஅடைய செய்வதாக தெரிவிக்கின்றனர்.நாகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் நாகை நகராட்சிக்கு சொந்தமான உரக்குடோனில் கொட்டப்படுகிறது. இந்த உரக்குடோன் திருச்சி- நாகை சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் எந்த நேரமும் கனரக வாகனங்கள் முதல் இலகுரக வாகனங்கள் வரை வந்து செல்கிறது. உரக்குடோனில் கொட்டப்படும் குப்பைகள் முறையாக பராமரிப்பு செய்யாமல் விடுவதால் இந்த உரக்குடோனில் எந்த நேரமும் தீப்பிடித்து எரிகிறது. இதனால் அந்த பகுதியே ஒரே புகைமண்டலமாக மாறி அந்த வழியாக எந்த ஒரு வாகனங்களையும் இயக்க முடியாத அவலநிலை ஏற்படுகிறது.நாகை நகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என முறையாக பிரித்து அதை உரக்குடோனில் கொட்டினால் போதும். ஆனால் அவ்வாறு குப்பைகளை சேகரிக்காமல் எல்லா குப்பைகளையும் ஒன்றாக சேகரித்து உரக்குடோனில் கொட்டப்படுவதாக புகார்கள் எழுகிறது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: திருச்சி-நாகை பிரதான சாலையில் நாகை நகராட்சிக்கு சொந்தமான உரக்குடோன் அமைந்துள்ளது.

இந்த உரக்குடோனில் எந்த நேரமும் குப்பைகள் தீப்பிடித்து எரிவதால் அந்த பகுதி ஒரே புகை மண்டலமாகவே காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்களை இயக்குவது மிகவும் கடினமாக உள்ளது. மேலும் உரக்குடோன் அருகே நாகை துணைமின் நிலையம் அமைந்துள்ளது. உரக்குடோனில் இருந்து வெளிப்படும் தீப்பொறி எதிர்பாராமல் துணைமின்நிலையத்திற்கு பரவினால் மிகப்பெரிய தீவிபத்தை சந்திக்க நேரிடும். மேலும் அருகிலேயே பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளிப்படும் துர்நாற்றம், உரக்குடோனில் இருந்து வெளியேறும் துற்நாற்றமும் சேர்ந்து அந்த பகுதியில் நுழைந்தாலேயே ஏதோ கூவம் பகுதிக்கு செல்வது போல் துர்நாற்றம் வீசுகிறது. உரக்குடோனில் அடிக்கடி ஏற்படும் தீவிபத்தை தடுக்க உரக்குடோனை சுற்றி எந்த நேரமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வகையில் குடிநீர் பைப்புகள் பொருத்த வேண்டும்.

மிகப்பெரிய அளவில் தீப்பிடித்தால் அருகில் உள்ள வீடுகளில் பரவாமல் இருக்க வசதியாக குடிநீர் இணைப்புகளை ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும். மக்கும், மக்காத குப்பை என்று பிரித்து குப்பைகளை வாங்கி மக்கும் குப்பைகளை உரமாக்கி விற்பனை செய்யலாம். அவ்வாறு செய்தால் உரக்குடோனில் குப்பைகள் அதிக அளவில் தேக்கம் அடைவதை தடுக்க முடியும்.திருச்சியில் இருந்து நாகை மட்டும் இன்றி இந்த சாலை வழியாகவே வேளாங்கண்ணி, காரைக்கால் உள்பட பல முக்கிய ஊர்களுக்கு வாகனங்கள்  செல்கிறது. எனவே உரக்குடோனில் அடிக்கடி தீப்பிடித்து எரிவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.


Tags : Motorists ,road ,Nagai-Trichy ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி