×

100 நாள் வேலை திட்டப் பணி தள பொறுப்பாளர்கள் குளறுபடி வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் பணியாளர்கள்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

பெரும்புதூர், மே 25: ஏரி, குளங்களை தூர்வாரும் 100 நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளர்களின் குளறுபடியால், வேலை செய்யாமல், பலர் சம்பளம் பெற்று செல்கின்றனர். இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.பெரும்புதூர் தாலுகாவில் பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஒன்றியங்களில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தற்போது மேற்கண்ட ஒன்றியங்களில் ஒருசில ஊராட்சிகளை தவிர பெரும்பாலான ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ஏரி, குளம், குட்டை, வரவுக்கால்வாய் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.ஒவ்வொரு ஊராட்சியிலும் 20 ஊழியர்கள் முதல் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு, குறிப்பிட்ட பணிக்கான சம்பளம் வழங்கப்படுகிறது. அந்தந்த ஊராட்சியில், 100 நாள் திட்ட வேலையினை மேற்பார்வையிட பணிதள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யபட்டுள்ளனர்.தற்போது பெரும்புதூர் தாலுகாவில் ஒருசில ஊராட்சிகளில் காலையில் பணிக்கு வரும் ஊழியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, ஆங்காங்கே இருக்கும் மரத்தடியில் ஓய்வு எடுக்க சென்றுவிடுகின்றனர். மாலையில் மீண்டும் வீட்டுக்கு சென்று விடுகின்றனர். இதனால் 100 நாள் திட்ட பணிகள் முறையாக நடக்கவில்லை. இதையொட்டி, அரசின் பல லட்சம் நிதி வீணாக விரயம் ஆகிறது என புகார் எழுந்துள்ளது.ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடக்கின்றன.

வருடத்தில் ஒரு குடும்பத்தினருக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தபடுகிறது. தற்போது ஒருசில ஊராட்சிகளில் பணிதள பொறுப்பாளர்கள் 100 நாள் திட்டத்தில் குளறுபடி செய்து பெரும்புதூர் ஒன்றியம் போந்தூர் ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 100 நாள் திட்ட பணியில் ஈடுபட்டுள்ளனர். காலையில் பணிக்கு செல்லும் ஊழியர்கள், அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு மரத்தடியில் படுத்து தூங்குகின்றனர். மேலும் சிலர் பணிக்கே வராமல் சம்பளம் வாங்கி பயனடைகின்றனர்.இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். பெரும்புதூர் தாலுகாவில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இதே நிலையில் உள்ளது என கிராம மக்களும் வேதனையுடன் தெரிவித்தனர்.எனவே, மாவட்ட நிர்வாகம், 100 நாள் திட்ட பணிதள பொறுப்பாளர்களிடம் உரிய விசாரணை நடத்தி, முறையாக பணிகள் நடக்க உத்தரவிட வேண்டும். அரசு நிதியை வீணாகாமல் பாதுகாத்து, மக்களின் பயன்பாட்டுக்கு செலவிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : job project work Salary employees ,
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...