×

திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

உத்திரமேரூர், மே 25: திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு போலீசார் வழங்கினர்.உத்திரமேரூர் பேரூராட்சியில் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு, உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையில் போலீசார், திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.அதில், வீடு மற்றும் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும், வங்கியின் எண், ஏடிஎம் எண், ஆதார், காஸ், பான் கார்டு எண், எல்ஐசி எண் கேட்டு தொலைபேசியில், யாராவது தொடர்பு கொண்டால், எந்த தகவல்களையும் பரிமாறக்கூடாது.

தெரியாத ஆட்களிடம் வங்கி புத்தகம் அல்லது ஏடிஎம் கார்டை கொடுக்க வேண்டாம்.  அடையாளம் தெரியாத நபர்கள், தங்களது நகைகளை கேட்டால் அவர்களிடம் கொடுக்க கூடாது. வெளியூருக்கு செல்பவர்கள் 2 நாட்களுக்கு மேல் ஆகும் பட்சத்தில், அருகில் உள்ள காவல் நிலையத்தில் லாக்குடு அவுஸ் ரிஜிஸ்டர் எனும் பதிவில் விலாசம் அளித்து, பதிவிட்டு செல்ல வேண்டும். இதனால் போலீசார் மூலம் தங்களது வீடு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.கிராமப்புற வீடுகளில் உள்ளவர்கள், தங்களது விலை உயர்ந்த ஆபரணங்களை மொத்தமாக வீட்டில் வைக்கக் கூடாது. தங்களது வீட்டுக்கு அடையாளம் தெரியாதவர்கள் வந்தால், அக்கம் பக்கத்தினரின் உதவியோடு அவர்களிடம் பேசவேண்டும். நகை பாலீஷ் செய்து தருவதாக யாரேனும் வந்தால், உடனே காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும்.காவல் நிலைய எண் அனைவரும், கையில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். நீங்கள் செல்லும் இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், உடனே காவல் நிலையத்துக்கு புகார் தெரிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளும், காவல் நிலைய தொலைபேசி எண் மற்றும் இன்ஸ்பெக்டர் செல்போன் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது.

Tags : theft incidents ,
× RELATED நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு