×

தாம்பரம் கிருஷ்ணா நகரில் மின்கம்பிகளை சூழ்ந்துள்ள மரக்கிளைகள்: அடிக்கடி மின்தடையால் மக்கள் தவிப்பு

தாம்பரம்: தாம்பரம் கிருஷ்ணா நகரில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் சூழ்ந்துள்ளதால் பலத்த காற்று வீசும்போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  தாம்பரம் அடுத்த கிருஷ்ணா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்குள்ள வீடுகள், கடை உள்ளிட்ட கட்டிடங்களுக்கு மின்வாரியம் சார்பில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள  கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் மீது பல இடங்களில் மரக்கிளைகள் படர்ந்துள்ளன. குறிப்பாக, 7வது தெரு, கருமாரியம்மன் நகர், விஷ்ணு நகர் முதல் பிரதான சாலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் படர்ந்துள்ளன. இதனால், பலத்த காற்று வீசும்போது தீப்பொறி ஏற்படுகிறது. அதுபோன்ற  நேரங்களில் தெருக்களில் நடந்து செல்வோர் அலறியடித்து ஓட்டம் பிடிக்கின்றனர். அதுமட்டுமின்றி, மின் கம்பிகள் உரசுவதால் அடிக்கடி இப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. எனவே, இப்பகுதியில் மின்கம்பிகள் மீது உரசும் வகையில் அமைந்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும், என இப்பகுதி மக்கள்  பலமுறை புகார் தெரிவித்தும் மின்வாரிய அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இப்பகுதியில் பல இடங்களில் மின்கம்பிகளை மரக்கிளை சூழ்ந்துள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் இதுபோன்ற மின்தடையால் பெரிதும் அவதிப்பட்டு  வருகிறோம். மேலும், மரக்கிளைகள் மின் கம்பியுடன் உரசி தீப்பொறி ஏற்படுவதால், சாலையில் நடமாடவே அச்சமாக உள்ளது. சில இடங்களில் தென்னை மரங்களின் காய்ந்த ஓலைகள் இந்த மின்கம்பிகள் மீது உரசுவதால், தீப்பற்றி எரியும் சம்பவங்களும் நடக்கிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தால் அலட்சியமாக பதிலளிக்கின்றனர். எனவே,  சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

பராமரிப்பு பணி இல்லை
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘மின்வாரிய அதிகாரிகள் பராமரிப்பு பணி மேற்கொள்வதாக கூறி, தாம்பரம் கிருஷ்ணா நகர் பகுதியில் மாதத்தில் ஒருநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 அல்லது 4 மணி வரை மின்தடை செய்கின்றனர்.  முன்பெல்லாம், இதுபோன்ற நாட்களில் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள், பழுதடைந்த மின் கம்பங்களை சீரமைப்பது, தெருக்களில் உள்ள மின்கம்பிகள் மீது படர்ந்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது போன்ற பணிகள் நடைபெறும்.  ஆனால், தற்போது எந்த பணியும் நடைபெறுவதில்லை. ஆனால், மின்தடை மட்டும் தவறாமல் செய்யப்படுகிறது,’’ என்றனர்.

Tags : city ,Krishna ,
× RELATED மதுராந்தகம் நகருக்குள் பகல்...