×

குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வாக்கு வங்கி சரிந்தது

குமாரபாளையம், மே 25: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியை இரண்டாக பிரித்து, கடந்த 2011ல் புதியதாக குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. இதில், மின்துறை அமைச்சர் தங்கமணி, 2 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் தங்கமணி 91,077 வாக்குகளும், திமுக செல்வராஜ் 64,190 வாக்குகளும் பெற்றார்.

அமைச்சர் தங்கமணி  26,887 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். 2016 சட்டமன்ற தேர்தலில் தங்கமணி 1,03,032 வாக்குகளும், திமுக யுவராஜ் 55,703 வாக்குகளும் பெற்றார். அதிமுக 47,329 வாக்குகள் கூடுதலாக பெற்றது. இரண்டு தேர்தல்களில் அதிமுக அதிக வாக்குகளை அள்ளியதால், குமாரபாளையம் அதிமுக கோட்டையாக இருந்தது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில், ஈரோடு தொகுதிக்குள் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி வந்தது. திமுக சார்பில் மதிமுகவில் போட்டியிட்ட கணேசமூர்த்தி 86,683 வாக்குகள் பெற்றார்.  அதிமுக வேட்பாளர் வெங்கு 65,323 வாக்குகளை பெற்றார். கணேசமூர்த்தி 21,360 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  இது அதிமுக நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு வங்கி சரிய ஜவுளித்தொழில் மற்றும் சாயத்தொழில், தொழிலாளர் பிரச்னையில் அதிமுக காட்டிய அலட்சிய போக்கே காரணம் என கூறப்படுகிறது. ஜவுளித்தொழில் கடந்த காலங்களில் பெரும் சரிவை சந்தித்த போதிலும், தொழிலை மீட்க அரசு எந்த விதமான நடவடிக்கையோ, வங்கி கடன் மானிய உதவியோ செய்யவில்லை.

தவிர மத்திய அரசின் ஜிஎஸ்டியால் ஜவுளி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த 5ஆண்டுகளாக சாயப்பூங்கா அமைத்தபாடில்லை. சிறு சாயப்பட்டறைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையால், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கூலி உயர்வு பிரச்னையால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

தொடர்ந்து 22 மாதங்களாக போராடிய பின்னரும், அவர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. ஆளும் கட்சியினர், அதிகாரிகள் அலட்சியம் காட்டிய நிலையில், திமுகவினர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி 10 சதவீதம் கூலி உயர்வு வழங்குவதாக அறிவித்தனர். இது ஆளும்கட்சி தொழிலாளர்களின் வாக்கு வங்கி சரிவுக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : constituency ,Kumarapalayam ,
× RELATED பதற்றமான வாக்குசாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு