×

போலீஸ் பற்றாக்குறையால் திருமங்கலத்தில் தொடரும் கொள்ளை சம்பவம்

திருமங்கலம், மே 25: போலீசார் பற்றாக்குறையால் திருமங்கலம் நகரில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. திருமங்கலம் போலீஸ் சப்டிவிசனில் டவுன், திருங்கலம் தாலுகா, கள்ளிக்குடி, சிந்துபட்டி, கூடக்கோவில், ஆஸ்டின்பட்டி, பெருங்குடி, மகளிர் ஸ்டேசன் ஆகிய 8 போலீஸ் ஸ்டேசன்கள் உள்ளன. மதுரை மாநகரையொட்டியுள்ள விளாச்சேரியில் துவங்கி விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சுரன்பட்டி வரையில் சுமார் 45 கி.மீ. தூரத்திற்கு சப்டிவிசன் பரந்து விரிந்துள்ளது. இதில் மதுரை கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை, மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலை, திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வருகின்றன.

மதுரை விமான நிலையமும் திருமங்கலம் சப்டிவிசனில்தான் அடங்கியுள்ளது. ஆனால் பரந்து விரிந்துள்ள திருமங்கலம் சப்டிவிசனில் அதற்கேற்றார் போல் போலீசார் இல்லை. திருமங்கலம் டவுனில் இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐகள் தவிர 47 போலீசார் பணியில் உள்ளனர். இந்த 47 பேரில் 35 பேர் வரையில் மாற்றுபணியில் உள்ளனர். மீதமுள்ள போலீசாரில் இன்ஸ்பெக்டர் டிரைவர், கோர்ட் பணி, டிஎஸ்பி, எஸ்பி அலுவலக பணி என போலீசார் அமர்த்தப்படுவதால் போலீசார் பற்றாக்குறையே நிலவுகிறது.

குறிப்பாக திருமங்கலம் டவுன் மற்றும் தாலுகா ஸ்டேசன்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே இயங்கி வருகிறது. அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசார் எண்ணிக்கையே இன்றுவரையில் நீடிக்கிறது. ஆனால் தற்போது மக்கள் தொகை பன்மடங்கு பெருகியும் போலீசார் எண்ணிக்கை கூடவில்லை. இதே நிலைதான் தாலுகா, கள்ளிக்குடி, ஆஸ்டின்பட்டி என அனைத்து ஸ்டேசன்களிலும் நிலவுகிறது.

குறிப்பாக நைட்ரவுண்ட்ஸ் எனப்படும் இரவு பணி போலீசார் ரோந்துக்கு போலீசார் இல்லாத நிலையால் கடந்த சில மாதங்களாக திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள், திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும், வழிப்பறியும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் திருமங்கலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள காமராஜபுரம் பகுதியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் மேற்கூரை உடைந்து நடந்த கொள்ளை சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் அரங்கேற இரவு பணியில் போலீசார் இல்லாததுதான் காரணம் என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். நகரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களது தெருவிற்கு தாங்களே இரவு காவல்பணிக்கு கூர்க்கா ஏற்பாடு செய்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக இரவு பணிக்கு என ஒரு போலீஸ்காரர் மட்டுமே செல்லும் நிலை உள்ளது என போலீசாரே புலம்புகின்றனர். இதே நிலைதான் திருமங்கலத்தை சுற்றியுள்ள கிராமபகுதிகளிலும் நிலவுகிறது.

எனவே பரப்பளவில் பெரிய அளவில் உள்ள திருமங்கலம் சப்டிவிசனுக்கு கூடுதல் போலீசார் நியமித்து நைட்ரவுண்ட்ஸ் பணிக்கு கூடுதலாக அனுப்பினால்தான் கொள்ளை சம்பவங்கள் குறையும். இனிவரும் நாட்களில் கொள்ளை, திருட்டு சம்பவங்களை குறைக்க மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருமங்கலம் மக்களின் கோரிக்கையாகும்.

Tags : Tirumangalam ,police force ,
× RELATED தண்ணீர் தொட்டியில் விழுந்த மயில் மீட்பு