×

மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி முதல் முறையாக வென்ற மதுரையை பறிகொடுத்து அதிமுக பரிதாபம்

மதுரை, மே 25: வேட்பாளர் தேர்வில் குளறுபடி, உட்கட்சி பூசல், அமைச்சர்களின் ஒத்துழைப்பு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முதல் முறையாக வென்ற மதுரை நாடாளுமன்றத் தொகுதியை அதிமுக இம்முறை பறி கொடுத்துள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பிரசார வியூகம் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு எளிதான வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.

 மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டார். அமமுக சார்பில் டேவிட் அண்ணாத்துரை போட்டியிட்டார்.

 சு.வெங்கடேசனுக்கும், ராஜ்சத்யனுக்கும் இடையே கடுமையான போட்டி என்று கூறப்பட்டது. ஆனால் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் எளிதாக வெற்றி பெற்றுள்ளார். மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 2014 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கோபாலகிருஷ்ணன் 4 லட்சத்து 54 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் முதல் முறையாக அதிமுக மதுரை நாடாளுமன்றத்தொகுதியை வென்று சாதித்தது.

ஆதலால் இந்த முறையும் அவர்தான் வேட்பாளர் என அதிமுகவினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மேலிட தலைவர்களிடம் கடுமையாக வாக்குவாதம் செய்து, பிடிவாதமாக மகனுக்கு ராஜன்செல்லப்பா சீட் பெற்றுத் தந்தார். இதனால் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியடைந்தனர். அவர்களையும் ராஜன்செல்லப்பா சரிகட்டினார். தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் பெற்றுத் தர முயற்சி செய்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்பி உதயக்குமார் ஆகியோரும் அதிருப்தியடைந்தனர்.

இதனால் ஆர்பி உதயகுமார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவிந்திரநாத் போட்டியிட்ட தேனி தொகுதியிலேயே முழுக்க முழுக்க தங்கி பிரசாரம் செய்தார். அமைச்சர் செல்லூர் ராஜூ அவ்வப்போது பங்கெடுத்து ராஜ்சத்யனுக்கு ஆதரவு பிரசாரம் மேற்கொண்டார். அதிமுகவில் எழுந்த கோஷ்பூசல்கள் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனுக்கு சாதகமாக இருந்தன. தவிர திமுக கூட்டணி கட்சியினர் கூட்டாக சேர்ந்து தேர்தல் வேலைகளை செய்தனர்.

மேலும் கீழடி தொல்லியல் அகழாய்வு, வைகை நதி பாதுகாப்பு, நீட்தேர்வு விதிவிலக்கு, கல்வி மற்றும் விவசாயக்கடன் தள்ளுபடி, ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் என்பது உள்ளிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் மக்களை சென்றடையும் வகையில் வியூகம் அமைத்து திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பிரசாரம் செய்தனர்.

ஜிஎஸ்டி வரி, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் செய்த பிரசாரம் நல்ல பலனை தந்தது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மொத்த வாக்குகள் 15,38,133. இதில் 10,11,649 வாக்குகள் பதிவாகின. வெங்கடேசன் 4 லட்சத்து 47 ஆயிரத்து 75 வாக்குகள் பெற்று, 1 லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்குகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றுள்ளார்.

Tags : Venkatesan ,Marxist ,win ,Madurai ,
× RELATED டிராக்டரில் குடிநீர் விற்பனை...