×

நத்தம் ஜிஹெச்சில் 10 டாக்டருக்கு 2 பேர் மட்டுமே பணி பல மணிநேரம் காத்திருப்பால் நோயாளிகள் கடும் அவதி

நத்தம், மே 25: நத்தம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் சிகிச்சை பெற பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நத்தத்தில் பஸ்நிலையம் அருகே அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இது தாலுகா அளவில் 24 மணிநேரம் மருத்துவமனையாகும். இங்கு 56 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு உள்ளது. இதில் ஆண், பெண் வார்டுகள் என பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநோயாளிகளாக தினமும்  நத்தம் நகர், கிராமப்பகுதிகளில் இருந்து சுமார் 800 முதல் 1000 பேர் வரை இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

மேலும் விபத்துகள் நேரிடும்போது இங்கு காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வருகின்றனர். மேல்சிகிச்சை தேவைப்பட்டால் அருகேயுள்ள மதுரைக்கு கொண்டு செல்லவும் வசதியாக உள்ளது. மேலும் தாலுகா மருத்துவமனை என்பதால் போலீஸ் வழக்கு சம்பந்தப்பட்ட பிரேத பரிசோதனைகளும் நடக்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நத்தம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இங்கு 10 டாக்டர்கள் பணி செய்ய வேண்டும். ஆனால் தற்போது 2 டாக்டர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால் இங்கு வரும் நோயாளிகள் பல மணிநேரம் நீண்டவரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.

இதை சரிசெய்ய திண்டுக்கல், வேடசந்தூரில் இருந்து சுழற்சி முறையில் 2 டாக்டர்கள் வந்து பணியாற்றி வருகின்றனர். அதுவும் அவ்வப்போதுதான். போதிய டாக்டர்கள் இல்லாததால் இங்கு வருபவர்கள் சிறிய நோய்க்கு கூட மதுரை, திண்டுக்கல் போன்ற அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளது.

தவிர தோல், பல், குழந்தைகள் நலம் போன்ற பல்வேறு பிரிவுகள் இருந்தும் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவைகள் முழுமையாக செயல்படாமல் உள்ளது. மேலும் 2 டாக்டர்கள் மட்டும் சிகிச்சை அளிக்கும் போது அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் சிறப்பு கவனம் செலுத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து நத்தம் வர்த்தகர்கள் சங்க தலைவர் சேக்ஒலி கூறியதாவது, ‘நத்தம் தாலுகாவில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அருகில் பல்வேறு அரசு மருத்துவமனைகள் இருந்தாலும் தாலுகா மையத்தில் உள்ள நத்தம் அரசு மருத்துவமனையில்தான் பெரும்பாலான மக்கள் சிகிச்சை பெற்று செல்ல வருகின்றனர். கடந்த 4 மாதங்களாக சுழற்சி முறை டாக்டர்களே வந்து செல்கின்றனர். இதனால் தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து திரும்பி செல்கின்றனர்.

எனவே இங்கு போதிய டாக்டர்களை நியமித்து அரசு மருத்துவமனை செயல்பட மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இங்கு வரும் நோயாளிகள் திருப்தியுடன் சிகிச்சை பெற்று நலத்துடன் திரும்ப ஏதுவாக இருக்கும். இதன்மூலம் மருத்துவமனையின் மீதும், அரசின் துறைகளின் செயல்பாட்டின் மீதும் நம்பகத்தன்மை ஏற்படும்’ என்றார்.

Tags : Natham Jhech ,doctors ,
× RELATED கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை...