×

தொண்டியில் கட்டி முடிக்கும் முன்பே இடிந்த அரசுப்பள்ளி சத்துணவு கூடம் பணிகள் தரமில்லை என குற்றச்சாட்டு

தொண்டி, மே 25:   தொண்டி மேற்கு தொடக்கப்பள்ளியில் கடந்த வருடம் புதிய சத்துணவு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அப்போது தொடங்கிய பணி ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இதனிடையே திடீரென சில நாட்களுக்கு முன்பு கட்டிடத்தின் முன் பகுதி சிலாப் இடிந்து விழுந்தது. பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் யாரும் இப்போது இல்லை. இன்னும் முழுதாக கட்டியே முடிக்காத கட்டிடம் இப்படி இடிந்து விழுந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணிகள் தரமாக நடக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சில நாள்களில் பள்ளிக்கூடம் திறக்க உள்ள நிலையில் இக்கட்டிடம் குறித்து பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கட்டிடத்தின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அகமது பாய்ஸ் கூறுகையில், கட்டிடம் கட்டுவதில் படு தாமதம் செய்து வருகின்றனர். கட்டிடமும் முற்றிலும் தரமற்ற நிலையில் உள்ளது. கட்டிடத்தின் உள் பகுதியில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் இடியும் நிலையில் உள்ளது. விபத்து நடக்கும் முன்பு அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : nursery center ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை