×

அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு குவிந்த வாக்குகள்

விழுப்புரம், மே 25: விழுப்புரம் மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்தது. இதில் மொத்தம் 11,35,540 வாக்குகள் பதிவாகின. இதில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 5,59,585 வாக்குகளும், அதிமுக கூட்டணி கட்சி பாமக வேட்பாளர் வடிவேல்ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்றார். 1,28,068 வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ரவிக்குமார் வெற்றிபெற்றார்.  மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் 17,891 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி பிரகலதா 24,609 வாக்குகளும், அமமுக கணபதி 58,019 வாக்குகளும், நோட்டாவிற்கு 11,943 வாக்குகளும் பதிவாகின. இதனிடையே விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ரவிக்குமாருக்கு அதிமுக எம்எல்ஏ தொகுதிகளில் அதிகளவு வாக்குகள் பதிவாகியுள்ளது. அதுவும் அமைச்சர் சண்முகம் தொகுதியில் அதிகவாக்குகள் பதிவாகியுள்ளது அதிமுக கூட்டணி கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மக்களவை தொகுதியில் விழுப்புரம், வானூர், உளுந்தூர்பேட்டை ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் அதிமுக வசம் உள்ளது. விழுப்புரம் அமைச்சர் சண்முகத்தின் தொகுதி. இந்த மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக வாக்குகள் விழுந்துள்ளது.

திண்டிவனம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிகள் திமுக வசம் உள்ளது. இதில் வழக்கம்போல் அக்கட்சி வேட்பாளர் என்ற முறையில் வாக்குகள் விழுந்துவிடும். ஆனால் அதிமுக வசமிடம் உள்ள சட்டமன்றத்தொகுதியிலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிகளவு வாக்குகள் விழுந்துள்ளது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் திமுகவிற்கு 87,989 வாக்குகளும், பாமகவிற்கு 74,901 வாக்குகள் பதிவாகியுள்ளது. அதே போல் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுருவின் தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் திமுகவிற்கு விழுந்துள்ளன. 1,18,398 வாக்குகள் பதிவாகியுள்ளது. பாமகவிற்கு 81,914 வாக்குகள் மட்டுமே பதிவானது. வானூர் அதிமுக எம்எல்ஏ சக்ரபாணி தொகுதியில் திமுக வேட்பாளருக்கு 87,803 வாக்குகளும், பாமகவிற்கு 66,912 வாக்குகள் கிடைத்துள்ளன.அதே போல் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் 92,248 வாக்குகள் திமுகவிற்கும், 65,402 வாக்குகள் பாமகவிற்கும் கிடைத்துள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் 83,432 வாக்குகள் திமுகவிற்கும், 74,819 வாக்குகள் பாமகவிற்கும் பதிவாகியுள்ளது. இதே போல் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் திமுகவிற்கு 86,685 வாக்குகளும், பாமகவிற்கு 66143 வாக்குகளும் பதிவாகியுள்ளன. 4741 தபால் ஓட்டுகளில் திமுகவிற்கு 2910 வாக்குகளும், பாமகவிற்கு 1426 வாக்குகளும் கிடைத்துள்ளது.

Tags : candidate ,AIADMK ,
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...