விழுப்புரம் மக்களவை தொகுதியில் அதிமுகவின் தொடர் வெற்றிக்கு தடை போட்ட திமுக

விழுப்புரம், மே 25:  விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் தொடர் வெற்றிக்கு திமுக தடை போட்டுள்ளது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், புதுவையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 37 இடங்களில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக மீண்டும் உருவெடுத்துள்ளது. இதனிடையே விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் தொடர் வெற்றிக்கு இந்த தேர்தலில் திமுக தடை போட்டு மீண்டும் விழுப்புரம் திமுகவின் கோட்டை என நிரூபித்துக் காட்டியுள்ளது.  விழுப்புரத்தை உள்ளடக்கிய திண்டிவனம் மக்களவைத் தொகுதி, மறுசீரமைப்பு மூலம் கடந்த 2009ம் ஆண்டு விழுப்புரம்(தனி) மக்களவைத் தொகுதி உருவானது. தொகுதியாக உருவான முதல் தேர்தலில் அதிமுகவும், திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சாமிதுரையும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் 2,797 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது.
அடுத்து வந்த 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் நேருக்கு நேர் மோதின. அதிமுக சார்பில் ராஜேந்திரனும், திமுக சார்பில் முத்தையனும் போட்டியிட்டனர். இதில் 1,93,367 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், 2019ம் ஆண்டு தற்போதைய தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக சார்பில் வடிவேல் ராவணன், திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.

அதிமுக, பாமக, தேமுதிக என மெகா கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்ததால் ஹாட்ரிக் வெற்றியை அதிமுக கூட்டணி ஏற்படுத்தும் என்று அக்கட்சியினர் நம்பியிருந்தனர். ஆனால் அவர்களின் கருத்துக்களை தவிடு பொடியாக்கி திமுக வேட்பாளர் ரவிக்குமார் 1,28,068 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரை தோற்கடித்தார்.  இதன் மூலம் அதிமுக கூட்டணியின் தொடர் வெற்றிக்கு திமுக தடை போட்டது மட்டுமின்றி மீண்டும் விழுப்புரம் திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது.
முதல் வெற்றியால் திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர். வரும் உள்ளாட்சி தேர்தலில் தீவிரமாக களப்பணியாற்ற இந்த வெற்றி தூண்டுகோலாக அமையும் என திமுகவினர்  கூறுகின்றனர்.

Tags : DMK ,AIADMK ,constituency ,Villupuram Lok Sabha ,
× RELATED உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக, அமமுகவினர் விருப்பமனு அளிப்பு