×

சட்டவிரோதமாக பயன்படுத்திய 8 மின்மோட்டார்கள் பறிமுதல்

காரைக்கால், மே 25: கோடைக்காலத்தையொட்டி, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், குடிநீர் குழாய்களில் மின்மோட்டாரை பொருத்தி நீரை உறிஞ்சக்கூடாது எனவும், மாவட்ட நிர்வாகமும், கொம்யூன் பஞ்சாயத்தும் அறிவுறுத்தியிருந்தது. இந்த அறிவுறுத்தலைமீறி, திருநள்ளாறு தொகுதியில் பலர் குடிநீர் குழாய்களில் மின் மோட்டாரை பொருத்தி நீரை உறிஞ்சி வருவதாக, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்கு புகார்கள் சென்றது. தொடர்ந்து, திருநள்ளாறு சேத்தூர், காமாட்சி நகர் பகுதியிலிருந்து வந்த புகாரின் அடிப்படையில், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக 8 வீடுகளில் உயர்திறன் கொண்ட மின்மோட்டாரை பொருத்தி குடிநீரை உறிஞ்சியது தெரியவந்தது. இந்த மின்மோட்டார்களை கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பறிமுதல் செய்தனர்.

இந்த நடவடிக்கை குறித்து ஆணையர் ராஜேந்திரன் கூறியது: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக பலர் புகார் கூறுகின்றனர். புகார் தெரிவிக்கும் பகுதியில் சோதனை நடத்தும்போது, இதுபோல மின்மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுவது தெரியவருகிறது. இன்றைய சோதனையில் 8 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதல் முறையாக இருந்தால் அபராதம் வசூலித்துக்கொண்டு மோட்டார் திருப்பித் தரப்படும். 2வது முறை என்றால் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவது திருப்பித் தரப்படமாட்டாது. மேலும் இந்தத் தவறை தொடர்ந்து செய்தால் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும். இனி தொடர்ந்து திருநள்ளாறு கொம்யூன் பகுதியில் தீவிர சோதனையில் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் ஈடுபடுவார்கள். என்றார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...