×

8 வழிச்சாலைக்கு கடும் எதிர்ப்பு விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் கலசபாக்கம் அருகே பரபரப்பு

கலசபாக்கம், மே 25: கலசபாக்கம் அருகே விவசாயிகள் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்தும் விவசாயிகள் நேற்று கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்தில் தென்பள்ளிப்பட்டு, பத்தியவாடி, பில்லூர், பொன்னாந்தாங்கல், நார்த்தாம்பூண்டி, சிறுகிளாம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், விவசாய நிலங்களை அளந்து குறியீடு கல் நடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குறியீட்டு கற்களை தூக்கி எறிந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது பேச்சை கண்டித்து கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் விவசாயிகள் விளைநிலங்களுக்கு முன் நேற்று கருப்பு கொடி ஏந்தி 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது என கூறியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : protesters ,
× RELATED இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த நடவடிக்கை...