×

பல்வேறு குளறுபடிகளால் நிறுத்தப்பட்டிருந்த காகுளம் மக்களவை தொகுதியில் தெலுங்குதேசம் வேட்பாளர் வெற்றி; நீண்ட இழுப்பறிக்கு பின் விசாகப்பட்டினத்தில் தெலுங்கு தேசம் வெற்றி

திருமலை, மே 25: பல்வேறு குளறுபடிகளால் நிறுத்தப்பட்டிருந்த காகுளம் மக்களவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் நீண்ட இழுப்பறிக்கு பின் விசாகப்பட்டினத்தில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது. ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 149 இடங்களிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 25 இடங்களிலும், ஜனசேனா கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றது.  இந்நிலையில், விசாகப்பட்டினம் வடக்கு சட்டப்பேரவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சராக இருந்த கண்டா சீனிவாஸ் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் கே.கே.ராஜீ போட்டியிட்டார்.
நேற்றுமுன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது 42, 64, 122, 244 என்ற ஆகிய 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக எண்ணப்படவில்லை. இதுதவிர 209வது எண் கொண்ட வாக்குப்பதிவு மையத்தில் இயந்திரத்தில் 371 வாக்குகள் பதிவாகியதாகவும், 120 ஒப்புகை சீட்டுகளும் கிடைத்தது.

இயந்திரத்தில் பதிவான வாக்கும், விவிபேட்டிலும் பதிவான வாக்கிலும் வித்தியாசம் உள்ளது. ஆனால் தேர்தல் ஆணைய வெப்சைட்டில் கண்டா சீனிவாஸ் 2439 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக பதிவாகியுள்ளது. இதனால் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தும்படி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய தேர்தல் அதிகாரிகள் விசாகப்பட்டினம் வடக்கு சட்டப்பேரவை தொகுதி முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்திவைத்தனர். மேலும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து மறுவாக்குப்பதிவு குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதற்கிடையே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மாநில தேர்தல் அதிகாரி கோபாலகிருஷ்ண திரிவேதியிடம் நேற்று புகார் மனு கொடுத்தனர். அதில், 209வது எண் கொண்ட வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்தால் வேறு ஒரு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறினர். ஆனால் அந்த இயந்திரம் எங்கு உள்ளது என தெரியவில்லை என கூறுகின்றனர். இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே, இந்த தொகுதியில் மறுவாக்குப்பதிவு அல்லது மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை விசாகப்பட்டினம் வடக்கு சட்டப்பேரவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சராக இருந்த கண்டா சீனிவாஸ் 2100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல் காகுளம் மக்களவை தொகுதியில் தெலுங்கு தேசம் வேட்பாளர் ராம்மோகன் 6888 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். மேலும் தபால் வாக்குகளில் 6 ஆயிரம் வாக்குகள் பல்வேறு காரணங்களை கூறி செல்லாது என அறிவிக்கப்பட்டது.

விவிபேடிற்கும், இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வாக்கு எண்ணிக்கையை அதிகாரிகள் நிறுத்தினர். இதனை தொடர்ந்து தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில் காகுளம் மக்களவை தொகுதியில் நேற்று காலை தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டது. இதையடுத்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் துவ்வாட சீனிவாஸை காட்டிலும் 6100 வாக்குகள் வித்தியாசத்தில் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் ராம்மோகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Tags : candidate ,constituency ,Telugu Desam ,Lok Sabha ,drawing ,Visakhapatnam ,
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...