×

கட்சி பாகுபாடின்றி பணியாற்றுவேன்

நாமக்கல், மே 24: தொகுதியின் வளர்ச்சிக்காக  சாதி, மதம், கட்சி பாகுபாடு இன்றி பணியாற்றுவேன் என நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கொமதேக வேட்பாளர் சின்ராஜ் உறுதியளித்தார்.  நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், 6 லட்சத்து 26 ஆயிரத்து 293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் ஆகியோருடன் சென்று, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஆசியாமரியத்திடம், வெற்றி சான்றிதழ் பெற்ற சின்ராஜ் கூறியதாவது:

தேர்தல் நேரத்தின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும், மக்கள் பிரச்னைகள் குறித்து குழு அமைத்து, ஆராய்ந்து அவற்றை நிறைவேற்றுவேன். குறிப்பாக குடிநீர் பிரச்னை, சாலை வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

எம்பி பதவி மூலம் எனக்கு கிடைக்கும் சம்பளத்தை, தொகுதியின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவேன். மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். சாதி, மதம், கட்சி பாகுபாடு இன்றி பணியாற்றுவேன். எனக்கு வாக்களித்த பொதுமக்கள் மற்றும் வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
. இவ்வாறு சின்ராஜ் தெரிவித்தார்.
 சின்ராஜ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர்  மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து காரில் நாமக்கல்லுக்கு வந்த சின்ராஜூக்கு, வழிநெடுக பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் உறசாக வரவேற்பு அளித்தனர்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்