×

தமிழகத்தில் எந்த நேரமும் தேர்தல் வரலாம் திருநாவுக்கரசர் பேட்டி

திருச்சி, மே 24:  இந்திய தேர்தல் முடிவுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் எந்த  நேரத்திலும் தேர்தல் வரலாம் என திருச்சி தொகுதிக்கான வெற்றி சான்றிதழை  பெற்ற பின் திருநாவுக்கரசர் கூறினார்.  திருச்சி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒட்டு மொத்த தேர்தல் வெற்றி நிலவரம் குறித்து  பிறகு பேசுவதாக தெரிவித்துள்ளனர். என்னை அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெறச் செய்த வாக்காளர்கள், அதற்காக உழைத்த திமுக உள்ளிட்ட தோழமை  கட்சியினர் அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் மாபெரும் வெற்றி  பெற்றுள்ளோம். இந்திய அளவில் பாஜக வெற்றி ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயம்.  பாஜக ஆட்சி அகற்றப்பட்டு காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களில் கூட ஓரிரு  தொகுதிகள் தான் கிடைத்துள்ளது. இதெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்.  இதுகுறித்து ராகுல் தெரிவிப்பார்.

 நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற  நிச்சயம் பாடுபடுவேன். ஆளுங்கட்சியாக இருந்தால் உடனே பணிகளை செய்ய  முடியும். தற்போது அரசை, அதிகாரிகளை வற்புறுத்தி வாக்குறுதிகளை  நிறைவேற்றுவேன். ஜனநாயகம் என்பது ஆளுங்கட்சி, எதிர்கட்சி  சேர்ந்ததுதான். அதில் போராடிதான் காரியங்களை பெற வேண்டும். திருச்சியில் தலைமை எம்பி  அலுவலகமும், அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் எம்பி அலுவலகம் இயங்கும்.  தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாத அரசாங்கம்தான் உள்ளது. தேர்தல் எந்த  நேரத்திலும் வரலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Anyone ,election ,interview ,Tamilnadu ,
× RELATED எந்த மதத்தினை, யாரை புண்படுத்தினாலும்...