ஈரோடு மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பாஸ் இல்லாத வாகனங்கள் வெளியேற்றம்


ஈரோடு, மே 24:ஈரோடு மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் பாஸ் இல்லாத வாகனங்கள் வெளியேற்றப்பட்டன. ஈரோடு மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. இதில், பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும்  சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. சித்தோடு ஐஆர்டிடி கல்லூரி நுழைவாயில் முன்பு பலத்த போலீஸ் போடப்பட்டிருந்தது. அடையாள அட்டை வைத்திருந்த தேர்தல் அலுவலர்கள், கட்சிகளின் பூத் ஏஜென்டுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்த வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல தேர்தல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட எஸ்.பி., உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் கார்களை பயன்படுத்திக் கொள்வதற்காக அந்த வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டிருந்தது. பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.

மற்ற வாகனங்களை போலீசார் வெளியேற்றினர். இருசக்கர வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஈரோடு மக்களவை தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கயம், தாராபுரம், குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் சவுக்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன், பேனா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்டுகள் எண்ணப்படும் வாக்குகளை பதிவு செய்வதற்காக பென்சில், பேப்பர் மட்டுமே எடுத்துச் செல்லப்பட்டது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு குறித்து எஸ்பி சக்திகணேசன் பார்வையிட்டார்.

Tags :
× RELATED உள்ளாட்சி தேர்தலில் 2524 பதவிக்கு 196 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல்