×

சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று பழநி கிராமங்களில் மின்சார சேவை பாதிப்பு

பழநி, மே 23: பழநி பகுதியில் சுழற்றி அடிக்கும் சூறைக்காற்றால் ஏராளமான கிராமங்களில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. சாலையில் உள்ள புழுதிகளுடன் காற்று வீசுவதால் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரிவதில்லை. இதனால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் சூறைக்காற்றின் காரணமாக பழநி அருகே உள்ள பாப்பம்பட்டி, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர் உள்ளிட்ட ஊர்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது. நேற்று பகல் நேரங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது.

கடந்த 2 நாட்களாகவே இப்பகுதிகளில் கேபிள் டிவிக்களும் பழுதடைந்துள்ளன. இதனால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தடையில்லா மின்சாரம் கிடைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது,
காற்று பலமாக வீசுவதால் மின்கம்பிகளின் மீது மரக்கிளைகள் விழுகின்றன. இதனால் மின்தடை ஏற்படுகிறது. மின்தடையை சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும், காற்று பலமாக வீசும்போது மின்தடை தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. இவ்வாறு கூறினர்.

Tags : areas ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்