×

திமுக கூட்டணி கட்சியினர் கொண்டாட்டம்

விழுப்புரம், மே 24: நேற்று நடந்த மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.  மக்களவை தேர்தல் நடக்கும் தேதிகளை கடந்த மார்ச் 10ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் வேலூரை தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் கடந்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி முடிவடைந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. மாவட்டம் முழுவதும் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 3,227 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 77.96 சதவீதம் வாக்குகள் பதிவாகின. விழுப்புரம் மக்களவை தொகுதியில் மட்டும் 78.31 சதவீத வாக்குகள் பதிவாகின. மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள வாக்காளர்களில் ஆண்கள் 13,48,376 பேர், பெண்கள் 13,46,064 பேர் என மொத்தம் 26,94,828 வாக்காளர்களில், 21,00,799 பேர் வாக்களித்தனர். அதில் ஆண்கள் 10,38,564 பேரும், பெண்கள் 10,62,102 பேரும் வாக்களித்தனர். ஆண்களை விட 23,568 பெண்கள் அதிகளவு வாக்களித்திருந்தனர். கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் மொத்தம் 1198141 பேர் வாக்களித்தனர். இதில் ஆண்கள் 5,80579 பேரும், பெண்கள் 617408 பேரும், இதர 77 பேர் அடங்குவர். வாக்கு சதவீதம் 78.33 ஆகும். விழுப்புரம் மக்களவை தொகுதியில், திமுக சார்பில் ரவிக்குமார், பாமக சார்பில் வடிவேல் ராவணன் உள்பட 14 பேர் போட்டியிட்டனர். கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் கவுதம சிகாமணி, தேமுதிக சார்பில் சுதீஷ், அமமுக சார்பில் கோமுகி மணியன் உள்பட 24 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில், மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது.

விழுப்புரம் தொகுதிக்கு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியிலும், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு அங்குள்ள ஏகேடி கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் துணை ராணுவம், ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் மேஜை வாரியாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பற்றிய விவரங்கள் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டது. விழுப்புரத்தில் 25 சுற்றுகளும், கள்ளக்குறிச்சியில்24 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப்பட்டது. முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வந்தனர். ஒவ்வொரு சுற்று முடிவிலும் திமுக வேட்பாளர்கள் முன்னிலை ெபற்று வந்ததால், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகமடைந்தனர்.இறுதியாக விழுப்புரத்தில் திமுக வேட்பாளர் ரவிக்குமார்1,28,018 வாக்குகள் வித்தியாசத்திலும், கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் டாக்டர் கவுதம சிகாமணி3,99,919 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வாக்கு எண்ணிக்கையையொட்டி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் திமுக நகரம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து நேற்று மாலை கடைவீதியில் முன்னாள் பேரூராட்சி  மன்ற தலைவர் வைத்தியநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு  இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் சுரேஷ்பாபு,  இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் டி.எஸ்.முருகன், பொருளாளர் சோமு, நகர துணை  செயலாளர் தில்லைகாமராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், மாவட்ட வழக்கறிஞர்  அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், ஆதிதிராவிட நல குழு அமைப்பாளர்  பாக்கியராஜ், முன்னாள் நகர செயலாளர் சிவப்புசெல்வம் மற்றும் சிடிபாலு, ரமேஷ், நக்கீரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Celebration ,DMK ,alliance ,
× RELATED திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு