×

என்ஆர் காங். தொகுதிகளிலும் முன்னிலை பெற்ற காங்கிரஸ்

புதுச்சேரி, மே 24: புதுச்சேரி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று ரங்கசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
புதுவையில் கடந்த 2016-ல் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார். அப்போது மத்திய பாஜக அரசால் கவர்னராக நியமிக்கப்பட்ட கிரண்பேடி புதுவையில் தனது அதிகாரத்தை செலுத்த தொடங்கினார். இதையடுத்து கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த 2 ஆண்டுகளாக அவ்வப்போது மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகை முன்பு தனது அமைச்சர்களுடன் முதல்வர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் முதல்கட்டமாக நடைபெற்ற 12 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் என்ஆர் காங்கிரஸ் தொகுதிகளான மங்கலம், மண்ணாடிப்பட்டு, கதிர்காமம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு மற்றும் அதன் கூட்டணி கட்சியான அதிமுகவின் கோட்டையாக விளங்கும் உப்பளம், மாகே சுயேட்சை தொகுதி ஆகியவற்றில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ஒவ்வொரு சுற்றிலும் என்ஆர் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்று ரங்கசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

 இதேபோல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ள தொகுதிகளிலும் தனது செல்வாக்கை அக்கட்சி இழக்காமல் அனைத்து சுற்றிலும் முன்னிலை வகித்தது. காங்கிரசுக்கு அதிக வாக்குகள் பெற்றுக் கொடுத்த தொகுதிகளின் பட்டியலில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தொகுதியான வில்லியனூரில் 13,391 வாக்குகள் கூடுதலாக கிடைத்து முதலிடத்தில் உள்ளது. முதல்வர் தொகுதியான நெல்லித்தோப்பு 13,146 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், அமைச்சர் மல்லாடியின் கோட்டையாக விளங்கும் ஏனாம் 12,678 வாக்குகளை பெற்றுக் கொடுத்து 3வது இடத்திலும் உள்ளன. மக்களவை தேர்தலுக்கு முன்புவரை மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததாக தகவல் பரவிய நிலையில், இந்த தேர்தல் முடிவு புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக கவர்னர் கிரண்பேடி மேற்கொண்ட நடவடிக்கைகளை மக்கள் ஏற்கவில்லை என்பது இதன்மூலம் நிரூபணமாகி இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Tags : Congress ,constituency ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...