×

தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி

புதுச்சேரி, மே 24: புதுவை தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் 1539 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் ஆனந்த் சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றார். இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அத்தொகுதிக்கு மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இந்த இடைத்தேர்தலில் வெங்கடேசன் (திமுக), நெடுஞ்செழியன் (என்ஆர் காங்கிரஸ்), கவுரி (நாம் தமிழர் கட்சி), முருகசாமி (அமமுக) உள்பட 8 வேட்பாளர்கள் ேபாட்டியிட்டனர். மொத்தமுள்ள 29,320 வாக்குகளில் 22,985 பதிவானது. இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் என்ஆர் காங்., வேட்பாளர் நெடுஞ்செழியனை விட 29 வாக்குகள் திமுக வேட்பாளர் வெங்கடேசன் பெற்றார். வெங்கடேசன் 81 வாக்குகளும், நெடுஞ்செழியன் 52 வாக்குகளும் பெற்றனர். அடுத்து, முதல் சுற்றில் 12 பூத்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் என்ஆர் காங்., வேட்பாளர் நெடுஞ்செழியன், திமுக வேட்பாளர் வெங்கடேசனை விட 172 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். 2வது சுற்றில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் முந்தினார். என்ஆர் காங்., வேட்பாளர் நெடுஞ்செழியனை விட அவர் 1088 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இறுதி சுற்றிலும் திமுக வேட்பாளர் வெங்கடேசன் 445 வாக்குகள் அதிகம் பெற்றார். முடிவில் என்ஆர் காங்., வேட்பாளர் நெடுஞ்செழியனை விட திமுக வேட்பாளர் வெங்கடேசன் 1539 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 10,906. நெடுஞ்செழியன் 9367 வாக்குகள் பெற்றுள்ளார். தட்டாஞ்சாவடி தொகுதி ரங்கசாமியின் நீண்டகால கோட்டையாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம் என்ஆர் காங்கிரசின் கோட்டையை தகர்த்து திமுக இத்தொகுதியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : victory ,DMK ,Dattanchavadi Assembly ,
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...