×

கட்சி கொடி கட்டி சென்றதை தட்டிக்கேட்டதால் இன்ஸ்பெக்டரை மிரட்டிய அமைச்சரின் கார் டிரைவர்

கடலூர், மே 24: கடலூர் தேவனாம்பட்டினம் வாக்கு எண்ணும் மையம் அருகே காரில் கட்சி கொடி கட்டி சென்றதை தட்டிக்கேட்ட இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரை உள்ளூர் அமைச்சரின் கார் டிரைவர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அசம்பாவிதங்களை தடுக்க மையத்தை நோக்கி கட்சி கொடிகளுடன் வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான அன்புச்செல்வன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்றுகாலை, வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள கடற்கரை சாலை பகுதியில் உள்ள வண்ணாரப்பாளையம் நான்குமுனை சந்திப்பில் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் கார் கட்சி கொடியுடன் வேகமாக சென்றது. அப்போது அந்த காரில் அமைச்சர் இல்லை.

இந்நிலையில் கட்சி கொடியுடன் வந்த காரை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது காருக்குள் இருந்த டிரைவர், இது அமைச்சர் கார், எப்படி தடுக்கலாம்? என்று கேட்டு தரக்குறைவாக பேசியதுடன், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை மிரட்டி விட்டு வேகமாக காரை வாக்கு எண்ணும் மையத்தை நோக்கி ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. திரும்பிச் செல்லும் போதும் அமைச்சருடைய கார் டிரைவர் காரை நிறுத்திவிட்டு மீண்டும் காவல்துறையினரை அசிங்கமாக திட்டியுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது: கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் நடந்த கடலூர் நாடாளுமன்ற தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட குமளங்குளம், நடுவீரப்பட்டு பகுதி 12, 13 பூத்களுக்குஉரிய மின்னணு வாக்குப்பதிவான இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான அன்புச்செல்வன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் அதில் ஏற்பட்ட பழுதுகள் சரிபார்க்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : car driver ,inspector ,
× RELATED கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது