×

சமூக வலைதளங்களில் அவதூறு மனோதங்கராஜ் எம்எல்ஏ போலீசில் புகார்

கருங்கல், மே 23: குமரி மேற்கு மாவட்ட திமுக ெசயலாளரும், பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏவுமான மனோ தங்கராஜ், தன் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள புகாரில், கருங்கல் கப்பியறை கிராமத்திற்கு உள்பட்ட கருங்கல் மலை பாரம்பரியமானது ஆகும். இந்த மலையில் கருங்கல் புனித அந்தோணியார் ஆலயத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் கப்பியறை பேரூராட்சிக்கு சொந்தமான பழத்தோட்டம் உள்ளது.தனிநபர் ஒருவர் இந்த மலையின் இயற்கை வளங்களை வெட்டி எடுத்து பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு செய்துள்ளார். மேலும் இயற்ைகயாக அமைந்த வாய்க்காலை நிரப்பி கனிம வளத்தை எடுத்துச்செல்ல சாலையும் அமைத்தார். இது குறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறையினர் அந்த சாலையை அகற்றி வாய்க்காலை சீரமைத்தனர்.

 இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில், கருங்கல் மலையில் கல்குவாரி நடத்தும் நபருக்கு எதிராக நான் வழக்கு தொடர்ந்தேன். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கல் குவாரியின் செயல்பாடுகளுக்கு தடை விதித்தது. இதனால் கல் குவாரி நடத்தும் நபர் போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் நபர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதித்தில் செயல்படுகிறார். மேலும் எனக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் என்னை குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன் எனது உதவியாளர் லஞ்சம் கேட்பதாக அவதூறு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் நபர் பெயரில் எனக்கு உதவியாளர் யாரும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவருடன் கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் டி.பி. ராஜன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ததேயு பிரேம்குமார், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் சத்தியராஜ், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் மரிய சுசுகுமார், கிள்ளியூர் ஒன்றிய திமுக துணை செயலாளர் அருள்ராஜ் உள்பட திமுகவினர் உடனிருந்தனர்.


Tags : Socialist ,Manathongaraj MLA ,
× RELATED பாஜவுக்கு தாமரை சின்னம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி