×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் அனுசரிப்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் திருச்சியில் 83 பேர் கைது

திருச்சி, மே 23:  தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினமான நேற்று திருச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 83 பேர் கைது செய்யப்பட்டனர்.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தாண்டு மே 22ம் தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் இறந்தனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதை கண்டித்து திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா முன்னிலையில் வாயில் கருப்பு துணி கட்டி, கருப்பு பேட்ஜ் அணிந்து, மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள், மகஇக நிர்வாகி சத்யா, பாடகர் கோவன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை உள்பட 83 பேரை கைது செய்தனர்.

 இது குறித்து ஒருங்கிணைப்பாளர் செழியன் கூறுகையில், தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் வாயில் கருப்பு துணி கட்டியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். போலீசார் அனுமதி அளிக்காதது கண்டிக்கதக்கது. ஜனநாயக விரோத செயல். 13 பேரை சுட்டு கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 13 பேருக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.


Tags : Tuticorin ,
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...