×

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டால் கருகி வரும் வாழை மரங்கள்

கும்பகோணம், மே 23: கடும் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் தட்டுப்பாட்டால் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் வாழை மரங்கள் காய்ந்து கருகி வருகிறது. எனவே நஷ்டஈடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கரில் மின்மோட்டார் பாசனத்தை கொண்டு வாழை சாகுபடி செய்துள்ளனர்.கடந்தாண்டு டிசம்பர் மாதம் வாழைக்கன்று நட்டு வரும் ஜூலை மாதம் இறுதியில் வாழைதார்களை அறுவடை செய்வர். பல ஆண்டுகளாக ஆறு, வாய்க்கால்களில் போதுமான தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் பெருமளவு வாழை விவசாயிகள், சொட்டுநீர் பாசனத்தை கொண்டு சாகுபடி செய்துள்ளனர்.ஆனால் மின்மோட்டாரில் போதுமான தண்ணீர் வராததாலும், சொட்டுநீர் பாசனத்துக்காக போடப்பட்ட குழாய்களை தரமானதாக அமைக்காததால் தண்ணீர் வாழை கன்றுகளுக்கு செல்லாமல் நடவு செய்யப்பட்ட அனைத்து கன்றுகளும் கருகிவி-்ட்டன.இதனால் ஒரு ஏக்கருக்கு செலவு செய்த தொகை வீணாகியுள்ளது. எனவே தமிழக அரசு, வாழைகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வரை  நஷ்டஈடு வழங்க வேண் டும். தவறும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளை திரட்டி போராட்டம் செய்யப்படும் என வாழை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வாழை விவசாயி பஞ்சாபிகேசன் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் குறைவான தண்ணீரை கொண்டு சொட்டுநீர் பாசனம் மூலம் வாழை சாகுபடி செய்ய தோட்டக்கலையை சேர்ந்த அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர்.

அவர்களின் ஆலோசனையின்படி ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்தனர். சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்வதற்காக 70 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும் என்று கூறியதால் சொட்டுநீர் பாசன முறையில் சாகுபடி செய்துள்ளோம்.
ஆனால் தோட்டக்கலை அலுவலர்கள், தனியார் நிறுவனம் மூலம் தான் சொட்டு நீர் குழாய் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்படி தனியார் நிறுவனத்தினர் தான் குழாய்களை அமைத்தனர். இதை நம்பி வாழை கன்றுகளை நட்டோம். ஆனால் மின்மோட்டாரில் குறைவான தண்ணீ-்ர் வந்தும், குழாய்களை முறையாக அமைக்காததால் தண்ணீர் செல்லாமல் போய்விட்டது. தற்போது கோடை கால அக்னி நட்சத்திரம் வெயிலால் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் வாழைக்கன்றுகள் கருகி வருகிறது. இதனால் வாழை சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.ஒரு ஏக்கருக்கு 1000 வாழை கன்றுகளை நடுவதற்கு ரூ.50 ஆயிரமும், இதுவரை செய்த செலவு உட்பட ரூ.1 லட்சம் வரை செலவாகியுள்ளது. போதுமான தண்ணீ-்ர் இல்லாததாலும், தோட்டக்கலை அலுவலர்களின் ஆலோசனை நம்பி வாழை சாகுபடி செய்ததால் செலவு செய்த தொகை அனைத்தும் நஷ்டமடைந்துள்ளது. எனவே கோடை வெப்பத்தால் கருகி வரும் வாழை சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை நஷ்டஈடு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.


Tags : neighborhood ,Kumbakonam ,
× RELATED திருப்புவனத்தில் பலத்த மழை: சூறைக்காற்றால் வாழை மரங்கள் சாய்ந்தன