×

திருப்புறம்பியத்தில் பழுதான மின்மாற்றி சீரமைப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

கும்பகோணம், மே 23: தினகரன் செய்தி எதிரொலியால் திருப்புறம்பியத்தில் பழுதான மின்மாற்றி உடனடியாக சரி செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கும்பகோணம் அருகே திருப்புறம்பியம், உத்திரை, ஆலமன்குறிச்சி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பம்ப்செட் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடியை துவங்கியுள்ளனர். தற்போது அனைத்து நெற்பயிரும் பூவும், காயுமாக (சூழ் பிடிக்கும்) பால் பிடிக்கும் பருவத்தில் காணப்படுகிறது. இந்நிலையில் திருப்புறம்பியத்தில் உள்ள டிபி.9 என்ற மின்மாற்றி கடந்த சில நாட்களாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மின்சாரமின்றி பம்ப்செட்டுகள் இயக்க முடிவில்லை.நெற்பயிர் வாடுவதை கண்ட விவசாயிகள், பல ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவு செய்து கும்பகோணத்தில் தனியார் நிறுவனத்திடம் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து அதன்மூலம் பம்ப்செட்டுக்கு மின்சாரம் கொடுத்து  தண்ணீர் பாய்ச்சி நெற்பயிரை காப்பாற்றி வருகின்றனர் என்று கடந்த 21ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் மின்வாரியத்தின் தஞ்சை மாவட்ட மேற்பார்வை பொறியாளர், கும்பகோணம் வடக்கு கோட்ட உதவி செயற்பொறியாளர் உத்தரவின்படி பழுதான மின்மாற்றியை உடனடியாக பழுதுநீக்கம் செய்யப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் மூலம் காய்ந்து, வதங்கி வந்த நெற்பயிருக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சினர். 200 ஏக்கரில் காய்ந்து கருகி, வீணாகும் நிலை ஏற்பட்ட குறுவை நெற்பயிர் மீட்க துரித நடவடிக்கை எடுத்த மின்சார துறையினருக்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED சீர்காழி பிடாரி வடக்கு வீதியில்...