×

பரமக்குடி நகர், புறநகர் பகுதிகளில் லாரிகளில் தரமற்ற தண்ணீர் விற்பனை அதிகாரிகள் அதிரடி காட்டுவார்களா?

பரமக்குடி, மே 23:  பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் குடிநீர் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து குறிப்பிடத்தக்க வகையில் மழை இல்லை. கடந்தாண்டு பெய்த சாரல் மழையாலும், வைகை ஆற்றில் சில நாட்கள் தண்ணீர் வந்ததாலும், நகராட்சியின் மூலம் வைகை ஆற்றில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டது. இதனால் சில மாதங்களாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பரவலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

புறநகர் பகுதிகளான நிலாநகர், புதுநகர், முல்லை, அங்குநகர், வேந்தோனி உள்ளிட்ட பகுதிளில் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்படும் சேதத்தால் பல இடங்களில் தண்ணீர் சாலை மற்றும் வயல்களில் வீணாகி வருகிறது. இதனால்புறநகர் கிராமங்களில் முறையான குடிநீர் விநியோகம் இல்லாமல் உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சில தனியார் லாரி உரிமையாளர்கள் லாரிகள் மூலமாக சுகாதாரமற்ற தண்ணீரை குடம் ரூ.20 முதல் 30 வரை விற்பனை செய்கின்றனர். வேறுவழியில்லாமல் கிராமத்தினர் பணம் கொடுத்து தாகம் தீர்க்கும் நிலையில் உள்ளனர். பாம்பூர், நயினார்கோவில் போகலூர், நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் லாரிகள் மட்டுமே தற்போதைய நீராதாரமாக மாறியுள்ளது.

வைகை ஆற்றிலிருந்து கிடைக்கும் நீர்வரத்தும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து கிடைக்கும் நீரின் அளவும் குறைந்துள்ளதால், தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. காட்டுபரமக்குடி, கமுதக்குடி, சூடியூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு போடப்பட்டுள்ள ஆள்துளை கிணறுகளில் தண்ணீர் வாங்கி. டிராக்டர், லாரி  மூலம் படுஜோராக விற்பனை செய்கின்றனர். தனியார் லாரி மற்றும் டேங்கர் லாரிகளை வரைமுறைப்படுத்த அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும். சுகாதாரம், ஊரக வளர்ச்சி துறையினர் இதற்கான நடவடிக்கை எடுத்து சுகாதாரமில்லாமல் குடிநீர் சப்ளை செய்யும் லாரிகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bosses ,suburbs ,Paramakudi Nagar ,
× RELATED தேர்தல் செலவுக்கு 2 பெரிய முதலாளிகள்...