×

ராசிபுரம் நகராட்சியில் சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளதால் விவசாய நிலங்களில் கடும் பாதிப்பு

ராசிபுரம், மே 23: ராசிபுரம் நகராட்சி பகுதியில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளதால், விளைநிலங்கள் பயிர் செய்ய முடியாதபடி பாதிக்கப்பட்டுள்ளது.  ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட கட்டூர் சாலையில் உள்ள நைனாசெட்டியார்  பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், தனியார் பள்ளிகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் நெல், சோளம், கம்பு, வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக, நகராட்சி 3வது வார்டு, புதிய பேருந்து நிலையம்,  கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர், விவசாய நிலங்களில்  தேங்கியுள்ளது.

இதனால், மண் வளம் பாதித்து விவசாய  பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புதைகுழி போல் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் சோளம்  விளைந்த நிலத்தில், தற்போது கோரை புற்கள் மட்டுமே வளர்கிறது. மேலும், சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளதால் விஷ ஜந்துகளான பாம்பு, தேள், பூரான் உள்ளிட்டவை, இரவு  நேரங்களில் சாலை மற்றும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு படையெடுக்கின்றன. இது தவிர, அப்பகுதி மக்கள் சிலர் குப்பை கழிவுகளை அங்கு கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கோடை மழை பெய்ததால் மழைநீரும், சாக்கடை கழிவுநீருடன் கலந்து சாலைகளில் வழிந்தோடுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார்  தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : municipality ,Rasipuram ,lands ,
× RELATED சின்னாளபட்டியில் சிறு மழைக்கே...