இன்று வாக்கு எண்ணிக்கை சிவகங்கை தொகுதியில் ‘கிங்’ யாரு? மானாமதுரையில் மும்முனை போட்டி ரிசல்ட் தெரிய தாமதம் ஏற்படலாம்

சிவகங்கை, மே 23: சிவகங்கை மக்களவை தொகுதி மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. சிவகங்கை மக்களவை தொகுதியில் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 15 லட்சத்து 50 ஆயிரத்து 390 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 7 லட்சத்து 84 ஆயிரத்து 513, ஆண்கள் 7 லட்சத்து 65 ஆயிரத்து 811, பிற பாலினத்தவர் 66 நபர்கள் ஆவர். இதில் ஆண்கள் 4 லட்சத்து 93 ஆயிரத்து 968 பேரும், பெண்கள் 5 லட்சத்து 81 ஆயிரத்து 133 பேரும், பிற பாலினத்தவர் 13 பேரும் என மொத்தம் 10 லட்சத்து 75 ஆயிரத்து 114 பேர் வாக்களித்துள்ளனர்.

69.34 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஆயிரத்து 856 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. மானாமதுரை(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 454 வாக்காளர்களில் ஆண்கள் 93 ஆயிரத்து 478 பேரும், பெண்கள் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 595 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 97 ஆயிரத்து 73 பேர் வாக்களித்தனர். வாக்கு சதவீதம் 74.80. வாக்குகள் இன்று காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14 மேஜைகள் போட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஒவ்வாெரு தொகுதிக்கும் வரும் ஏஜெண்டுகளுக்கு ஒவ்வொரு கலரில் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.


அந்த அனுமதி அட்டை வைத்துள்ளவர்கள் அந்த சட்டசபை தொகுதியில் மட்டும்தான் அனுமதிக்கப்படுவர். அடுத்த தொகுதிக்கு செல்ல அனுமதி கிடையாது. வேட்பாளர் மற்றும் அவரது பவர் ஏஜெண்டு மட்டுமே செல்போன் கொண்டு செல்லலாம். மற்றவர்கள் கொண்டு செல்லக்கூடாது. வாக்கு எண்ணிக்கையின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் அந்த வாக்குச்சாவடிக்கு உரிய வாக்குகளை உறுதிப்படுத்தும் இயந்திரம் மூலம் கடைசியாக எண்ணப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 5 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குகளை உறுதி செய்யும் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் கடைசியில் எண்ணப்படும்.

இந்த வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாக்குகள் எண்ணும் அனைத்து மேஜைகளும் சிசிடிவி கேமரா கொண்டு கண்காணிக்கப்படும். வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்படும். இறுதி முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம். சிவகங்கை மக்களவை தொகுதியில் எட்டு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் 18 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 26 பேர் போட்டியில் உள்ளனர். இதில் கார்த்திசிதம்பரம்(காங்கிரஸ்), எச்.ராஜா(பாஜ), தேர்போகி பாண்டி(அமமுக) ஆகியோர் இடையே பிரதான போட்டி நிலவுகிறது. இதேபோல் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, அமமுகவை சேர்ந்த வேட்பாளர் உட்பட 13 பேர் களத்தில் உள்ளனர்.

Tags : King ,constituency ,Sivagangai ,Manamadurai ,competition ,
× RELATED மலைகளின் அரசி