சென்னை புறநகர் பகுதிகளில் விதி மீறும் வாகன ஓட்டிகளால் நாள்தோறும் விபத்து அதிகரிப்பு

சென்னை, மே 23: சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குன்றத்தூர், பூந்தமல்லி, திருவேற்காடு, திருவள்ளூர், செவ்வாப்பேட்டை உள்பட பல பகுதிகளில் விதிகளை மீறும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்கும் பொழுது, அதற்கு அரசு நிர்ணயித்துள்ள சில சாலை விதிகளை வாகனத்தின் உரிமையாளர் பின்பற்ற வேண்டும் என்ற விதி உள்ளது.உதாரணமாக வண்டியின் பதிவு நம்பரானது குறிப்பிட்ட உயரம் மற்றும் அகலத்தில், கருப்பு, வெள்ளை நிறத்தில் தான் வாகனத்தில் எழுத வேண்டும். இதுவே கார், லாரி உள்ளிட்ட வாடகை வாகனங்களாக இருந்தால் மஞ்சள் நிற நம்பர் பிளேட்டில், கருப்பு நிறத்தில் எழுத்துக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது சாலை விதி. அவ்வாறு எழுதப்படும் வாகன எண்ணானது, தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஏதேனும் குற்றச் செயல்கள் நடைபெறும் பொழுது, வாகனத்தின் எண்ணை வைத்து, அதன் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இன்று பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் அரசு விதிகளின் படி, பதிவு எண்ணை எழுதுவது கிடையாது. நம்பர் தெளிவில்லாமல் எழுதுவது, அல்லது நம்பர் பிளேட்டில் படம், பெயர் உள்ளிட்டவற்றை வரைகின்றனர்.

இதனால் ஏதேனும் குற்றச் செயல்கள் நடைபெறும் பொழுது, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறுகின்றனர். அதுபோலவே கார்களில், உள்ளே இருக்கும் நபர்கள் வெளியில் தெரியாதவாறு, அடர் கருப்பு நிற கூலிங் ஸ்டிக்கர்கள் கண்ணாடியில் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஒட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறி, கடந்தாண்டுகளில் போக்குவரத்து காவலர்கள், அதுபோல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட வாகனத்தின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்தனர்.இதனால் அந்த நேரங்களில் விதிமுறைகளை மீறாமல் இருந்த வாகன ஓட்டிகள் சிலர், தற்போது போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால், மீண்டும் தங்களது கார்களில் அடர் கருப்புநிற ஸ்டிக்கரை ஒட்டி வலம் வருகின்றனர். இதனால் ஆள்கடத்தல் மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

எனவே பெருகி வரும் குற்றச்செயல்களை கருத்தில் கொண்டு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தெளிவான நம்பர் பிளேட் மற்றும் உள்ளிருக்கும் ஆட்கள் வெளியில் தெரியும் வகையில் கார்களில் கருப்பு பிலிம் ஒட்டாத வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் இதுபோன்று அரசு விதிகளை மீறுவது அதிரித்துள்ளது. எனவே வாகன உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிப்பதன் மூலம் பெருகி வரும் குற்றச்செயல்களை ஓரளவேனும் தடுக்க முடியும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : suburbs ,Chennai ,
× RELATED அரசு மருத்துவமனையில் டெங்கு...