×

அருப்புக்கோட்டை பகுதி ரேசன் கடையில் பலசரக்கு பொருள் வாங்க வற்புறுத்தல்

அருப்புக்கோட்டை, மே 23: அருப்புக்கோட்டையில் புளியம்பட்டி கூட்டுறவு பண்டகசாலையின் கீழ் 15 ரேசன் கடைகளும், விருதுநகர் மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டகசாலையின் கீழ் 15 ரேசன் கடைகளும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் 2 ரேசன் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேசன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சீனி, மண்ணெண்ணெய் மற்றும் பருப்பு, பாமாயில் உட்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பொருட்கள் வாங்கச் செல்லும்போது கூடுதலாக ஊட்டி டீத்தூள், உப்பு மற்றும் பலசரக்கு வகைகள் மற்றும் சேமியா, சோப்பு வாங்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.

பெரும்பாலும் இலவசமாக வழங்கக்கூடிய அரிசி வாங்கச் செல்லும்போது டீத்தூள் பாக்கெட் வாங்கச்சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்.  ஒரு டீத்தூளின் விலை ரூ.19 ஆனால் ரூ.20 வசூலிக்கப்படுகிறது. மேலும் பலசரக்கு வகைகளில் தனியார் கடைகளில் விற்கப்படும் விலையைவிட கூடுதலாக ரேசன் கடையில் விற்கின்றனர். பொதுமக்கள் பலசரக்கு போன்ற பொருட்கள் வாங்கமாட்டோம் என கூறினால் சீனி, பருப்பு, பாமாயில் வழங்கமாட்டோம் என ரேசன்கடை விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கும், ரேசன்கடை ஊழியர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. ரேசன் பொருட்கள் வாங்க வரும்போது பலசரக்கு பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவு இருந்தும் விற்பனையாளர்கள் பொதுமக்களை கட்டாயப்படுத்துகின்றனர்.

இதுகுறித்து ரேசன்கடை விற்பனையாளர்கள் கூறுகையில், ‘ஒரு கடைக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய்க்கு பலசரக்கு அனுப்புகின்றனர். கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூட்டம் போட்டு எங்களை வாய்மொழியாக விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கும், எங்களுக்கும் தான் பிரச்சனை வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தான் பலசரக்கு விற்பனை செய்வது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Aruppukkottai ,ration shop ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...