×

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாமல்லபுரம் சிறுமியின் ஸ்கேட்டிங் குறும்படம்

மாமல்லபுரம் மே 23: மாமல்லபுரத்தை சேர்ந்த சிறுமியின் ஸ்கேட்டிங் குறும்படம் ஆர்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மாமல்லபுரம் மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி. கடற்கரை கோயில் பகுதியில் மீன் வறுவல் விற்பனை செய்கிறார். இவரது, மகள் கமலி (10). மாமல்லபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு, 3 வயதில் இருந்து ஸ்கேட்டிங் எனப்படும் சறுக்கு விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உதவியுடன் கமலி ஸ்கேட்டிங் செய்ய வசதியாக சிமென்ட் தளம் அமைத்து தரப்பட்டது. அதில், தினமும் கமலி ஸ்கேட்டிங் செய்து பயிற்சி பெற்றார். இதைதொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த, சர்வதேச ஸ்கேட்டிங் வீரர் ஜேமி தாமஸ் என்பவர், கமலியின் ஸ்கேட்டிங் ஆர்வத்தை கண்டு ஆச்சர்யம் அடைந்தார்.மேலும், கமலி ஸ்கேட்டிங் பயிற்சி செய்வதை வீடியோ எடுத்து பேஸ்புக் மற்றும் யூ ட்யூபில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோவை யூ ட்யூபில் பார்த்த நியூசிலாந்து நாட்டை சேர்ந்த குறும்பட இயக்குனர் ஷாஷா ரெயின்போ என்பவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது, மாமல்லபுரத்துக்கு வந்து கமலியை சந்தித்தார். அப்போது கமலி, மீனவ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் வறுமையில் வாடுவதும் அவருக்கு தெரியவந்தது.

பின்னர், கமலியின் ஸ்கேட்டிங் திறமை, அவரது குடும்ப சூழல் குறித்து கமலி என்ற பெயரில் குறும்படம் ஒன்றை தயாரித்தார். இந்த குறும்படம் மும்பையில் நடந்த சர்வதேச திரைப்பட விழா மற்றும் அட்லாண்டாவில் நடந்த சர்வதேச குறும்பட விழா ஆகியவற்றில் திரையிடப்பட்டது. இந்த குறும்பட இயக்குனருக்கு சிறந்த குறும்பட இயக்குனர் என்ற விருதும் கிடைத்தது.இந்நிலையில், சிறுமி கமலியின் குறும்படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் விருது உலகம் முழுதும் தயாரிக்கப்படும் திரைப்படங்கள், ஆவணப் படங்கள், குறும் படங்கள் ஆகியவற்றுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. 2019ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக குறும்படங்கள் பிரிவில் கமலியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல் அதன் இயக்குனர் ஷாஷா ரெயின்போ மூலம் கமலியின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த வாரம் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்பதற்காக சீனா சென்ற சிறுமி கமலி, நேற்று முன்தினம் மாமல்லபுரம் திரும்பினார்.உலகளவில் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று சாதனை புரிந்ததற்காகவும், அவரின் சாதனை வாழ்க்கை குறித்த குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்ததற்காகவும், மாமல்லபுரத்தை சேர்ந்த மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சிறுமி கமலிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...