×

திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையங்களில் வடக்கு மண்டல ஐஜி ஆய்வு பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்

திருவண்ணாமலை, மே 23: திருவண்ணாமலை, ஆரணி மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் நேற்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்கும், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆரணி மக்களவை தொகுதிக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதையொட்டி, விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்துக்கும் தலா ஒரு ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 12 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதோடு, ஒவ்வொரு மையத்திலும் தலா 200 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இரண்டு மையங்களையும், வடக்கு மண்டல போலீஸ் ஐஜி நாகராஜன், எஸ்பி சிபிசக்கரவர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

மேலும், வாக்கு எண்ணும் மையம் முழுவதும், அங்குலம் அங்குலமாக மெட்டல் டிடெக்டர் சோதனை நடத்தப்பட்டது. மேலும், இரண்டு மையங்களிலும் நுழையும் அனைத்து நபர்களையும் வீடியோவில் பதிவு செய்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும், எந்த பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என ஐஜி தெரிவித்தார். அதேபோல், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 200 அடி தூரம் வரை தடுப்பு வேலிகள் அமைக்கவும், சம்பந்தப்பட்ட சாலையில் போக்குவரத்து தடை செய்யவும் உத்தரவிட்டார். தேர்தல் ஆணையத்தின் அடையாள அட்டை இல்லாத நபர்களை, வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கூடாது என்றார்.

Tags : voting centers ,Thiruvannamalai ,
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...