×

அரக்கோணம் அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் அதிகாரிகள் சமரசம்

அரக்கோணம், மே 23: அரக்கோணம் அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம். இதனால், அப்பகுதி மக்களுக்கு போதிய அளவு தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே, குடிநீருக்காக, பல்வேறு இடங்களில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். மேலும், பணம் கொடுத்து கேன் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரக்கோணம் பிடிஓ அலுவலகத்தில் பலமுறை எடுத்து கூறினர். ஆனால், இதுவரை அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிகுடங்களுடன் ஒன்று திரண்டு அப்பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவல் அறிந்த அரக்கோணம் துணை பிடிஓ ராஜா, டவுன் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டு இருக்கும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தண்ணீர் கிடைக்காமல் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே, உடனடியாக சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக கூச்சலிட்டனர். இதற்கு அதிகாரிகள் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து, மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Road traffic officers ,Arakkonam ,
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...