×

திருமூர்த்தி அணையில் போலீஸ் குவிப்பு

உடுமலை, மே 22:  திருமூர்த்தி அணையில் சுற்றுலா பயணிகள் உயிரிழப்பதை தடுப்பதற்காக எஸ்பி கயல்விழி உத்தரவின்பேரில் 12 போலீசார் அணையை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை உள்ளது. இங்கு பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி அணைக்கு வந்து செல்கின்றனர்.

அணையின் மேல் பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வராததால் சுற்றுலா பயணிகள் பொதுப்பணித்துறையின் தடையை மீறி அணைக்குள் இறங்கி குளிக்கின்றனர். சேறும், சகதியும் நிறைந்த அணையில் குளிப்பவர்கள் அகழியில் சிக்கி அடிக்கடி உயிரிழக்கின்றனர்.
நேற்று முன்தினம் தஞ்சாவூரை சேர்ந்த மாணவி ஒருவர் அணையில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. மேலும், சுற்றுலா பயணிகளின் உயிரிழப்பை தடுக்க அணையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் அணையின் ஆழம் தெரியாமல் குளிப்பதற்காக உள்ளே இறங்கி சேற்றில் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது இதுபோன்ற உயிரிழப்பை தடுக்க பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை இணைந்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அணையின் ஆழமான பகுதிகள் அருகே எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

அதையும் மீறி குளிப்பவர்களை அணையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட எஸ்பி கயல்விழி உத்தரவின்பேரில், ஆயுதப்படை போலீசார் 10 பேரும், சட்டம் ஒழுங்கு போலீசார் 2 பேரும் என மொத்தம் 12 பேர் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திருமூர்த்தி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கண்காணித்து அணைக்குள் அத்துமீறி இறங்குபவர்களை எச்சரித்து வெளியேற்றி வருகின்றனர்.

நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்தனர். அருவியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அவர்கள் அத்துமீறி அணைக்குள் இறங்கி குளிக்க துவங்கினர். இதையடுத்து அணையை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்களை எச்சரித்து வெளியே அனுப்பினர். அவர்கள் அறையை சுற்றிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோடை வெயிலால் அருவியில் குளித்து மகிழலாம் என வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் தண்ணீர் இல்லாததாலும், அணைக்குள் இறங்கி குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதாலும் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.

Tags : dam ,
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...