×

இருபுறமும் வளர்ந்த வேப்ப மரங்களால் அமராவதி பிரதான கால்வாய் உடையும் அபாயம்

உடுமலை, மே 22:இருபுறமும் வளர்ந்த வேப்ப மரங்களால் அமராவதி பிரதான கால்வாய் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அமராவதி அணையில் இருந்து துவங்கும் பிரதான கால்வாய், தாராபுரம் அடுத்த கோவிந்தாபுரம் வரை சுமார் 67 கிமீ., தூரம் செல்கிறது. இதன் மூலம் 27 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்கால் பாசனத்தை பயன்படுத்தி விவசாயிகள் நெல், கரும்பு பயிர்களை அதிகளவில் பயிரிடுகின்றனர். சீலக்காம்பட்டியில் இருந்து மெட்ராத்தி செல்லும் சாலையின் குறுக்கே பிரதான கால்வாய் செல்கிறது.

இதன் இடதுபுறம் சுமார் 1 கிமீ., தூரத்துக்கு, கால்வாயின் இருபுறமும் வேப்ப மரங்கள் வளர்ந்துள்ளன. கால்வாயை மூடி மறைக்கும் அளவுக்கு அடர்த்தியாக வேப்ப மரங்கள் உள்ளன. இலைகளும், மரக்கிளைகளும் முறிந்து கால்வாய்க்குள் விழுகின்றன. இதனால், கால்வாயின் தண்ணீர் செல்லும் வேகம் குறைகிறது. குறிப்பாக கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

மேலும், வேப்பமர வேர்களால் கால்வாயின் இருகரைகளிலும் வெடிப்பு ஏற்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் கால்வாய் கரை உடையும் அபாயம் உள்ளது. எனவே, இரு கரைகளிலும் உள்ள வேப்ப மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.  இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘சிறிய மரமாக இருக்கும்போதே வெட்டி இருக்க வேண்டும். தற்போது பெரிய அளவில் வளர்ந்து கால்வாயில் இடையூறாக உள்ளது. நீண்ட நாட்களாக கவனிக்காமல் விட்டுவிட்டனர். மரக்கிளைகள் விழுந்து கிடப்பதால் தண்ணீர் கடைமடைக்கு தாமதமாக வருகிறது. எனவே, மரங்களை அகற்ற வேண்டும்,’’ என்றனர்.

Tags : canal ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்