கோவையில் உள்ள உணவு கடைகளில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் உபயோகிக்க கட்டுப்பாடு

கோவை, மே 22: கோவையில்  உள்ள உணவு கடைகளில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் உபயோகிக்க  கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை  அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள பேக்கரிகள்,ஓட்டல்கள்,டீக்கடைகள்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் உணவு விடுதிகள்,கேன்டீன்கள்  மற்றும் இதர இடங்களில் காரம், இனிப்பு பலகாரம் தயாரிக்க  பயன்படுத்தும் எண்ணெய் சுத்தமானதாக இருக்க வேண்டும்.

உணவு  நிறுவனங்கள் ஒருமுறை உபயோகித்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. மேலும், உணவு வணிகர்கள் சமையல் எண்ணெய் நாள் ஒன்றுக்கு 50 லிட்டருக்கு மேல்  உபயோகம் செய்தால் அவர்கள் எண்ணெய்யை அப்புறப்படுத்திய விவர பதிவேடு  பராமரிக்க வேண்டும். எந்தந்த எண்ணெய் எந்த அளவு  பயன்படுத்தப்பட்டது?. அவை எவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டது? அல்லது மறு  சுழற்சி செய்யப்பட்டது? என்ற விவரத்தை பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க  வேண்டும்.

பழைய எண்ணெய் பயன்படுத்துவதால் மனித உடலுக்கு புற்றுநோய் மற்றும் பல உடல் உபாதை  உண்டாகி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். உபயோகம் செய்த எண்ணெய்யை  அப்புறப்படுத்திவிட்டோம்.மீண்டும் உபயோகப்படுத்தவில்லை என்று முறையாக  பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு உணவு விற்பனை  கடைகளுக்கு பல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றாத  நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

× RELATED திருவானைக்காவல் புதிய மேம்பாலம் 19ம் தேதி பயன்பாட்டுக்கு வருகிறது