மரவள்ளி கிழங்கு பயிரை சேதப்படுத்தும் விலங்குகள் வன எல்லையில் அகழி அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஈரோடு, மே 22:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பூர் மலைக்கிராமங்களில் மரவள்ளிகிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படும். கடந்த ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்குகள் கடந்த மாதம் அறுவடை செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த சில வாரமாக பெய்த மழை காரணமாக, கடம்பூர் மலைக்கிராம விவசாயிகள் புதிய மரவள்ளிகிழங்கு பயிர்களை நடவு செய்ய துவங்கியுள்ளனர்.

சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு பயிரை வனவிலங்குகள் சேதப்படுத்தாமல் இருக்க மின் வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த முறை  வன விலங்குகள் மின் வேலியையும் தாண்டி வந்து, விவசாய நிலத்திற்குள் புகுந்து மரவள்ளி கிழங்கு செடிகளை சேதப்படுத்தின.  

எனவே, இந்த ஆண்டில் மரவள்ளி கிழங்கு பயிரை பாதுகாக்க வனப்பகுதியின் எல்லையில் அகழி அமைத்து, விவசாய நிலத்திற்குள் வன விலங்குகள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கடம்பூர் மலைக்கிராம விவசாயிகள் கூறுகையில், ‘‘நடப்பாண்டுக்கான மரவள்ளி பயிர் நடவு துவங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 2 மாதங்களுக்கு தொடரும். மழையை நம்பி மட்டுமே நாங்கள் மரவள்ளிகிழங்குகளை சாகுபடி செய்து வருகிறோம்.  தற்போது லேசான மழை பொழிந்தால் கூட மரவள்ளி கிழங்கு பயிர் துளிர்விட  ஆரம்பிக்கும்.

தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களில் களை எடுத்தல்,  இயற்கை உரம் பயன்படுத்துதல் போன்ற வேலைகளை படிப்படியாக செய்வோம். வன விலங்குகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை  தடுக்க வனத்துறையினர் வன எல்லையில் அகழி அமைத்தால் எங்களுக்கு சேதம் ஏற்படுவது ஓரளவுக்கு தடுக்கப்படும்,’’ என்றனர்.

Tags : forest border ,
× RELATED டெல்டாவில் வெள்ளத்தில் மூழ்கிய பல...