×

வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன், தீப்பெட்டிக்கு அனுமதியில்லை

கிருஷ்ணகிரி, மே 22: செல்போன், தீப்பெட்டி, சிகரெட் கூர்மையான பொருட்களை வாக்கு எண்ணும் மையத்திற்குள் கொண்டுவர அனுமதியில்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்கள், பொது முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்களின் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபாகர் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி பண்டிகங்காதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே அமர வேண்டும். பிற இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. போட்டியிடும் வேட்பாளர் மற்றும் அவரது பொது முகவர் ஆகியோர் மட்டும் போட்டியிடும் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்கு எண்ணும் பகுதிகளுக்கும் செல்ல இயலும். போட்டியிடும் வேட்பாளர் அல்லது முகவர் ஆகியோரில் ஒருவர் மட்டுமே வாக்கு எண்ணும் ஒரு மேசையில் இருப்பதற்கு அனுமதி உண்டு. தேர்தல் நடத்தும் அலுவலரின் மேசைக்கு ஒரு முகவர் நியமிக்கப்படுவார்கள். முகவர்களை நியமனம் செய்வதற்கான படிவம் 18ஐ 3 தினங்களுக்கு முன்பாக வழங்க வேண்டும்.

முகவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டை தயார் செய்து, ஒப்புதல் பெற்று அவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முகவர்களுக்கான அடையாள அட்டையில் வேட்பாளரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் முகவர்கள் நாளை(23ம்தேதி) காலை 6 மணிக்கு முன்னதாக வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்துவிட வேண்டும். செல்போன், தீப்பெட்டி, சிகரெட் மற்றும் கூர்மையான பொருட்களை வாக்கு எண்ணும் மையத்திற்குள் கொண்டு வர அனுமதியில்லை. வாக்கு எண்ணும் மையங்களுக்கு அலுவலர்கள்,  வேட்பாளர்களின் முகவர்கள் செல்வதற்கு 3 நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார். கூட்டத்தில் டிஆர்ஓ சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொ) ராமமூர்த்தி, தேர்தல் தனி தாசில்தார் ராமசந்திரன், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : vote count center ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில்...